சீன கார் நிறுவன முதலீட்டை இழந்தது தமிழகம்: அன்புமணி

சென்னை : பா.ம.க., தலைவர் அன்புமணி நேற்று வெ ளியிட்ட அறிக்கை:

சீனாவைச் சேர்ந்த, பி.ஒய்.டி., என்ற மின்சார தார் தயாரிப்பு நிறுவனம், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில், 85,000 கோடி ரூபாய் முதலீட்டில், தொழிற்சாலை அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 'டெஸ்லா' நிறுவனத்தை விஞ்சி வரும் பி.ஒய்.டி, கார் ஆலையை, தங்கள் மாநிலத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று, தமிழகம், குஜராத், மஹாராஷ்டிரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் போட்டியிட்டன.

பி.ஒய்.டி., நிறுவனம், 2,800 கோடி ரூபாய் செலவில் உதிரி பாகங்களை இணைத்து, மின்சார வாகனங்களை உருவாக்கும் ஆலையை, தமிழகத்தில் கடந்த 2019ல் அமைத்திருந்தது. ஆனாலும், தமிழக அரசால் பி.ஒய்.டி., கார் ஆலையை கொண்டு வர முடியவில்லை.

'ஆசியாவின் டெட்ராய்ட் சென்னை' என்று, தமிழக அரசு பெருமிதம் கொள்கிறது. இந்நிலையில், உலகின் மிகப்பெரிய மின்சார கார் உற்பத்தி நிறுவனம், தமிழகத்தை புறக்கணித்திருப்பது கவலை அளிக்கிறது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான தமிழகத்தின் திறன் குறைந்து வருவதையே, இது காட்டுகிறது.

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தொழில் துவங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில், கடந்த முறை மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகம், நடப்பாண்டில் பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளது. தொழில் முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு செல்வது ஏன் என்பதை, தமிழக அரசு ஆராய்ந்து, தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கான திறனை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement