ஆர்.எஸ்.எஸ்., தலைமையகம் செல்ல 11 ஆண்டுகள் மோடி காத்திருந்தது ஏன்?

சென்னை : பிரதமரான பின் முதல்முறையாக, கடந்த 30ம் தேதி, நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகத்திற்கு மோடி சென்றது, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய தருணம்
ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளின் தலைவர்களும், தொண்டர்களும், தங்கள் வாழ்வின் முக்கிய தருணங்களில், இங்கு வந்து மரியாதை செலுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அதனால், 2014ல் பிரதமரான நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகம் வந்து, ஹெட்கேவார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மூன்றாவது முறையாக பிரதமராகியும் கூட, அங்கு மோடி செல்லவில்லை.
இத்தனைக்கும் 2014 லோக்சபா தேர்தலின்போது, பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட, ஆர்.எஸ்.எஸ்., தான் காரணமாக இருந்தது. மோடிக்கு, ஆர்.எஸ்.எஸ்., தலைமையின் ஆதரவு இருப்பதை அறிந்த பின்னரே, அப்போது போர்க்கொடி துாக்கிய மூத்த தலைவரான அத்வானி அமைதியானார்.
ஆனாலும், பிரதமராகி 11 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக, ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகம் சென்றுள்ளார். ஆர்.எஸ்.எஸ்., நிறுவனர் ஹெட்கேவார் பிறந்த நாளான யுகாதி நாளில், அவருக்கு மரியாதை செலுத்துவதை, அந்த அமைப்பின் ஒவ்வொரு தொண்டரும் கடமையாக கொண்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகம் செல்ல, அந்த நாளை தான் மோடி தேர்வு செய்துள்ளார்.
கைகளில் நாடு
இதன் பின்னணி குறித்து, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கடந்த 1925ல் ஹெட்கேவார், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை துவக்கியபோது, புதிய அமைப்பால் என்ன சாதித்து விட முடியும் என, பலரும் கேள்வி எழுப்பினர்.
அவர்களுக்கு பதில்அளித்த அவர், 'நாட்டின் மக்கள் தொகையில் குறைந்தது 3 சதவீதம் பேரை, ஆர்.எஸ்.எஸ்., செயல்பாடுகளுக்குள் கொண்டு வந்துவிட்டால், அப்போது நம் தொண்டர்களின் கைகளில் நாடு இருக்கும்' என்றார்.
அப்போது, அதை யாரும் நம்பவில்லை; கேலியும் செய்தனர். ஆனால், 1998ம் ஆண்டிலேயே ஆர்.எஸ்.எஸ்.,சில் பயிற்சி பெற்ற வாஜ்பாய் பிரதமரானார். 2014 முதல் ஆர்.எஸ்.எஸ்.,சில் முழுநேர ஊழியராக இருந்த மோடி பிரதமராக இருக்கிறார்.
ஹெட்கேவாரின் லட்சியத்தை எட்டிப் பிடித்து விட்டோம் என்பதை நாட்டுக்கு உணர்த்தவே, ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டில் வரும் ஹெட்கேவாரின் பிறந்த நாளில், அவரது நினைவிடத்தில் மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு மட்டுமல்ல; ஒவ்வொரு ஆர்.எஸ்.எஸ்., தொண்டருக்கும் உணர்ச்சிபூர்வமான வரலாற்று தருணம் இது. இதற்காகவே பிரதமர் மோடி, 11 ஆண்டுகள் காத்திருந்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.








மேலும்
-
பாக். அதிபர் ஆசிப்அலி சர்தாரிக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் கிகிச்சை
-
சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் வி.ஏ.ஓ., !
-
கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: இ.பி.எஸ்., பேட்டி
-
மோடியை சசி தரூர் புகழ்வதற்கு காரணம் என்ன; பா.ஜ., எம்.எல்.ஏ., கூறுவது இதுதான்!
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு