காபி கொள்முதல் நிலையம் ஏற்காட்டில் அமைக்க மனு

மேட்டூர்: ஏற்காடு தமிழக மலைவாழ் பழங்குடியினர், இயற்கை விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலர் மாதுார் ராமர் மற்றும் நிர்வாகிகள், ராஜ்யசபா அ.தி.மு.க., - எம்.பி.,யும், அகில இந்திய காபி வாரிய உறுப்பினருமான சந்திரசேகரனிடம் மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:

ஏற்காடு வட்டத்தில், 67 கிராமங்களில் சிறு, குறு விவசாயிகள் அனைவரும் பல தலைமுறைகளாக காபி சாகுபடி செய்கிறோம். 70 ஆண்டுகளுக்கு மேலாக, அரசு சார்பில் அமைத்த காபி வாரியம், நாங்கள் உற்பத்தி செய்த காபிக் கொட்டைகளை கொள்முதல் செய்தனர்.

அந்த காலக்கட்டத்தில், ஆண்டுக்கு எட்டுமுறை வாரியம் சார்பில், விவசாயிகளுக்கு போனஸ் வழங்கினர். கடந்த, 1990ல் ஏற்காடு காபி வாரியத்தை கலைத்தனர்.

தற்போது நாங்கள் உற்பத்தி செய்யும் காபிக் கொட்டைகளை தனியார் நிறுவனங்களிடம் விற்கிறோம். அதற்கு உரிய விலை கிடைப்பதில்லை.

விவசாயிகள் சிரமத்தை கருத்தில் கொண்டு, ஏற்காட்டில் மீண்டும் அரசு காபி கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

காபி வாரியம் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக, அவர் உறுதியளித்தார்.

Advertisement