முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை அறிவித்தால் கூட்டணி வெற்றிக்கு சிக்கல்

48



முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை அறிவித்தால், தமிழகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்பதை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆதாரப்பூர்வமாக விளக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக, தமிழக பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:



சமீபத்தில் டில்லியில் அமித் ஷாவை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சந்தித்தார். அவரை தொடர்ந்து, அண்ணாமலையும் சந்தித்து பேசினார்.

'டிபாசிட்' இழப்பு



அப்போது, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமையும்பட்சத்தில், அதற்கு பழனிசாமி தலைமை ஏற்க அனுமதிக்கக்கூடாது என, அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். அதற்கான புள்ளிவிபர ஆதாரங்களையும் அவர் அளித்துள்ளார்.


அதாவது, 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., 20 சதவீதம் ஓட்டுகளை பெற்றது. பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு 18 சதவீதம் கிடைத்தது. கடந்த 2014, 2019 ஆகிய லோக்சபா தேர்தல்களைவிட, 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், தே.ஜ., கூட்டணி ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது.


இதற்கு அ.தி.மு.க., ஓட்டு வங்கியில் ஏற்பட்டுள்ள சரிவுதான் காரணம்.


ஜெயலலிதா தோழி சசிகலா மற்றும் அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கிய பின் நடந்த, 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல், 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், முக்குலத்தோர் சமுதாய ஓட்டுகள் கணிசமாகவே அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு கிடைத்தன.


ஆனால், பன்னீர்செல்வத்தை நீக்கியபின் நடந்த தேர்தலில், முக்குலத்தோர் சமுதாய ஓட்டுகள் குறையத் துவங்கி விட்டன. ராமநாதபுரத்தில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட பன்னீர்செல்வம், அ.தி.மு.க.,வை பின்னுக்குத் தள்ளி, இரண்டாம் இடத்தைக் கைப்பற்றினார்.

மூன்றாம் இடத்திற்கு அ.தி.மு.க., தள்ளப்பட்டு, 9 சதவீதம் ஓட்டுகளுடன், 'டிபாசிட்' இழந்தது.


அதேபோல், தேனி தொகுதியிலும் அ.தி.மு.க.,வுக்கு வெறும் 13 சதவீதம் ஓட்டுகளே கிடைத்தன; டிபாசிட்டையும் இழந்தது.


திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி லோக்சபா தொகுதிகளிலும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க.,வுக்கு மோசமான தோல்வியே கிடைத்தது.


கொங்கு மண்டலத்தில் கோவை, நீலகிரி மற்றும் தென்சென்னை, மத்திய சென்னை தொகுதிகளிலும், அ.தி.மு.க., கூட்டணிக்கு மூன்றாவது இடமே கிடைத்தது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களுக்கு கிடைத்த மக்கள் ஆதரவு, பழனிசாமிக்கு இல்லை.


அ.தி.மு.க.,வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகள் குறைந்து விட்டதால், இரட்டை இலை மீது இருந்த மவுசும், மதிப்பும் குறைந்துவிட்டது. வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட ஒரே காரணத்திற்காகவே, வட மாவட்டங்களில், அ.தி.மு.க.,வால் ஓட்டுகளை தக்கவைக்க முடிந்தது என்பதை, அமித் ஷாவிடம் அண்ணாமலை தெளிவுபடுத்தி இருக்கிறார்.

மேலும், நாடார், முக்குலத்தோர் உள்ளிட்ட சமுதாயங்களின் ஓட்டுகள், அ.தி.மு.க.,வுக்கு குறைந்து வருவது குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும், அமித் ஷாவிடம் அண்ணாமலை பட்டியலிட்டுஉள்ளார்.

பின்னடைவு



அதேபோல், வன்னியர், கவுண்டர் அல்லாத சமுதாயத்தினர் ஓட்டுகள் பழனிசாமி தலைமைக்கு ஏன் கிடைக்கவில்லை என்பதையும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவை ஆதாரமாக காட்டி இருக்கிறார் அண்ணாமலை.


ஈரோடு கிழக்கு தொகுதியில், கவுண்டர் ஓட்டுகள் அடர்த்தியாக உள்ள வார்டுகளில், 40 சதவீதம் அ.தி.மு.க., பெற்றுள்ளது. ஆனால், நாயுடு, செங்குந்தர், தலித், அருந்ததியர் கணிசமாக வசிக்கிற பகுதிகளில் உள்ள ஓட்டுகளில், 12 சதவீதம் மட்டுமே பெற முடிந்துள்ளது.


எனவே, தொடர் தோல்வி கண்டு வரும் பழனிசாமியை முன்னிறுத்தி, வரும் சட்டசபை தேர்தலை சந்தித்தால், தே.ஜ., கூட்டணிக்கு பின்னடைவுதான் ஏற்படும். பழனிசாமி தலைமை இல்லாத அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பதுடன், முதல்வர் வேட்பாளராக வேறு ஒருவரை அறிவிக்க வேண்டும் என்றும் அமித் ஷாவிடம், அண்ணாமலை கூறியுள்ளார்.

இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்.





- நமது நிருபர் -

Advertisement