27 மாதங்களாக ஒரு யானை கூட ரயில் மோதி உயிரிழக்கவில்லை; ரயில்வே தகவல்

சென்னை : 'ரயில்வே மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கையால், கடந்த 27 மாதங்களாக, ரயிலில் மோதி யானை இறக்கும் சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.
ரயில்களில் யானைகள் அடிபட்டு இறக்கும் சம்பவங்களை தொடர்ந்து, அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பது குறித்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது.
ரயில்வே தரப்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, அவ்வப்போது அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகின்றன. இவ்வழக்கு, சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தெற்கு ரயில்வே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி.ராம்குமார் கூறியதாவது:
ரயில் பாதைகளின் இருபுறமும் யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க, 12 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு கோபுரங்களிலும், இரண்டு அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ரயில் தண்டவாளத்தில் இருந்து, 100 முதல், 150 மீட்டர் தொலைவில் யானை வந்தால், அதுகுறித்த தகவல் உடனே கட்டுப்பாட்டு அறை மற்றும் அப்பகுதியில் வரும் ரயில் ஓட்டுநர் ஆகியோருக்கு, ஒலி, ஒளியாக சென்று விடும்.
ரயில் தண்டவாளங்களில் இருபுறமும், 'ஆப்டிகல் பைபர் கேபிள்' உடன் கூடிய ஐ.டி.எஸ்., வசதி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, தண்டவாளங்களில் இருபுறமும், 'சென்சார் கேபிள்' பொருத்தப்பட்டுள்ளது.
தமிழக, கேரள வனத்துறை அதிகாரிகளுடன் ரயில்வே அதிகாரிகளும் கூட்டாக ஆய்வு மேற்கொண்டு, தண்டவாளங்களை யானை கடந்து செல்ல வசதியாக, சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளால், ரயிலில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன. கடந்த 2022 அக்., முதல் தற்போது வரை, 27 மாதங்களாக ரயிலில் மோதி யானை உயிரிழக்கும் சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.
மேலும்
-
ஆன்லைன் சூதாட்ட தடை நடவடிக்கை: தீவிரம் வேண்டும் என்கிறார் அன்புமணி
-
பாக். அதிபர் ஆசிப்அலி சர்தாரிக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் கிகிச்சை
-
சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் வி.ஏ.ஓ., !
-
கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: இ.பி.எஸ்., பேட்டி
-
மோடியை சசி தரூர் புகழ்வதற்கு காரணம் என்ன; பா.ஜ., எம்.எல்.ஏ., கூறுவது இதுதான்!
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ