தங்கம் விலை 3 மாதங்களில் ரூ.10,200 அதிகரிப்பு!

1

சென்னை: தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், நேற்று ஆபரண தங்கம் சவரன் விலை, 67,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சவரனுக்கு 10,200 ரூபாய் அதிகரித்துள்ளது.


சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,360 ரூபாய்க்கும், சவரன் 66,880 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 113 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


நேற்று தங்கம் விலை கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து, 8,425 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில் 67,400 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:



சீனா மற்றும் இந்தியாவில் இருந்து, அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு, ஏப்ரல் முதல் கூடுதல் வரி விதிக்கப்பட்டு உள்ளது. இது, 2ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஈரானுக்கு பல இன்னல்களை அமெரிக்கா கொடுத்து வந்த நிலையில், தன்னிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக ஈரான் கடந்த வாரம் தெரிவித்தது.


மேலும், பாதாள அறைகளில் ராணுவ பீரங்கிகள் இருப்பு வைத்துள்ள வீடியோவையும் வெளியிட்டது. இது போன்ற காரணங்களால், உலகளவில் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.


சீனா தன் நட்பு நாடுகளை தவிர்த்து, மற்ற நாடுகள் சீனாவில் வைத்துள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது. இதுமட்டும் அல்லாமல், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும், அவற்றின் நட்பு நாடுகளும் இணைந்து, தங்கள் வசம் உள்ள அமெரிக்க டாலர்களை கொண்டு, பெருமளவில் தங்கம் வாங்கி குவிக்க துவங்கி உள்ளன.


இதனால், சர்வதேச சந்தையில் டாலர் புழக்கம் அதிகரித்து, அதன் மதிப்பு சரிந்தது; தங்கம் விலை உயர்ந்தது. வரும் நாட்களில் தங்கம் புதிய உச்சத்தை நோக்கி பயணிக்கும். கடந்த ஜனவரி 1ல் கிராம் தங்கம், 7,150 ரூபாய்க்கும், சவரன் 57,200 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.


இன்று கிராம், 8,425 ரூபாயாகவும், சவரன் 67,400 ரூபாயாகவும் உள்ளது. மூன்று மாதங்களில் சவரனுக்கு, 10,200 ரூபாய் அதிகரித்துள்ளது. இதேநிலை தொடர்ந்தால், விரைவில் சவரன் 80,000 ரூபாயை எட்டிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement