கிணறுகளில் நீர்மட்டம் குறைவு காய்கறி சாகுபடிக்கு சிக்கல்

சின்னமனூர்: தொடர்ந்து மழை பெய்யாமல், அதிக வெப்பம் நிலவுவதால், கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் பயிர்களை காப்பது எப்படி என விவசாயிகள் புலம்புகின்றனர்.

கம்பம், சின்னமனூர் வட்டாரங்களில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் காய்கறி, பழப்பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலானவற்றில் கிணற்று நீர் பாசனம் நடைபெற்று வருகிறது. குறைந்த சிலரே ஆற்றில் இருந்து தண்ணீரை எடுத்து பாசனம் செய்கின்றனர்.

கம்பம் வட்டாரத்தில் அணைப்பட்டி, ராயப்பன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களிலும், சின்னமனூர் வட்டாரத்தில் ஒடைப்பட்டி, வெள்ளையம்மாள்புரம், கன்னிசேர்வை பட்டி, அப்பிபட்டி, காமாட்சிபுரம், சீப்பாலக்கோட்டை உள்ளிட்ட பல கிராமங்களிலும் காய்கறி பயிர்கள் அதிக பரப்பில் சாகுபடியாகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்யவில்லை. மாறாக கடும் வெயில் அடிக்கிறது. இதனால் கிணறுகளில் நீர்மட்டம் குறையத் துவங்கியுள்ளது. தோட்டங்களில் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இதே நிலை நீடித்தால் விவசாய பணிகளை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை என்று விவசாயிகள் புலம்ப துவங்கி உள்ளனர்.

Advertisement