கடலுாருக்கு கூடுதல் பஸ் சேவை; நடுவீரப்பட்டு மக்கள் கோரிக்கை

நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு பகுதியில் காலை நேரத்தில் கடலுாருக்கு பஸ் போக்குவரத்து குறைவாக உள்ளதால் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கடலுாருக்கு நடுவீரப்பட்டு வழியாக அரசு பஸ் தடம் எண் 15 இயக்கப்படுகிறது. இந்த பஸ் சாத்தமாம்பட்டிலிருந்து சிலம்பிநாதன்பேட்டை, பத்திரக்கோட்டை, நரியன்குப்பம் வழியாக நடுவீரப்பட்டுக்கு வந்து பாலுார் வழியாக கடலுார் செல்கிறது. இந்த பஸ்சில் தான் நடுவீரப்பட்டு சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் கடலுார்,புதுச்சேரி பகுதியில் உள்ள பள்ளி, கல்லுாரிக்கு செல்கின்றனர். இவர்கள் நடுவீரப்பட்டுக்கு வந்து பஸ் ஏறி கடலுார் செல்கின்றனர்.

பஸ் நடுவீரப்பட்டு வருவதற்குள் முழுமையாக இடம் நிறைந்து விடுவதால், நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள் பஸ்சில் ஏற இடம் இல்லாமல் தினமும் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு செல்கின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, நடுவீரப்பட்டிலிருந்து நேரடியாக கடலுாருக்கு கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement