வேலப்பர் கோயில் சித்திரை திருவிழா தண்ணீர் வசதிக்கு நடவடிக்கை தேவை

ஆண்டிபட்டி: மாவூற்று வேலப்பர் கோயில் சித்திரை திருவிழாவில் கூடுதலாக தண்ணீர் வசதி செய்திட வேண்டும் என பக்தர்கள் கோரியுள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். மருத மரங்களின் வேர் பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனை கோயிலின் தனிச்சிறப்பு. விரதம் இருந்து சுனையில் நீராடி வேலப்பரை வழிபடுவதால் தீராத வினைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் தேதி, அதனை அடுத்த வரும் நான்கு வார நாட்களிலும் நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். விழாவை முன்னிட்டு ஆண்டிபட்டியில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். விழா முதல் நாளிலேயே வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் வியாபாரிகள் கோயில் வளாகத்தில் தங்குகின்றனர். கடந்த காலங்களில் சுனையில் கிடைத்த அதிக நீர் வரத்து பக்தர்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்தது. தற்போது மழை இல்லாததால் சில மாதங்களாக சுனையில் நீர் வரத்து குறைந்துள்ளது. பக்தர்கள் நீராடவும், உணவு சமைக்கவும் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.

பக்தர்கள் கூறியதாவது: கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஒரே நேரத்தில் குளிக்கவும், சமைக்கவும், குடிநீருக்கும் அதிக தண்ணீர் தேவைப்படும். கோயில் நிர்வாகம் கிணறு, போர்வெல் மூலம் கிடைக்கும் நீரை பொதுமக்கள் பயன்படுத்த தற்காலிக தொட்டிகள் அமைத்து தேக்கலாம். கோயில் வளாகத்தில் இருந்து சில கி.மீ., தூரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். நெருக்கடியான பகுதியில் டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு செல்வதும் சாத்தியமில்லை. கோயில் வளாகத்தில் கிடைக்கும் சுனை நீரை பக்தர்கள் சிக்கனமாகவும் முறையாகவும் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றனர்.

Advertisement