நீர்நிலை கரைகளில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதாரக்கேடு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் முறைப்படி அப்புறப்படுத்தாது, நீர்நிலை கரைகளில் இரவோடு இரவாக இறைச்சி கழிவுகளை கொட்டி செல்வதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

மாவட்டத்தில் இறைச்சி கழிவுகளை முறைப்படி அப்புறப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. அவற்றை உள்ளாட்சி நிர்வாகங்கள் வாங்குவதே கிடையாது. பரப்பளவு பெரிதாக உள்ள, வளர்ந்த ஊராட்சிகளில் கூட இன்று இது பெரிய தலைவலியாக உள்ளது.

இறைச்சி கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு உரமாக்குதல், காற்றில்லா செரிமானம் மூலம் உயிர்வாயுவாக மாற்றுதல், மற்றும் வணிகக் கழிவு சேகரிப்பு நிறுவனங்கள் மூலம் அகற்றுதல் போன்ற முறைகள் உள்ளன. ஆனால் இவற்றில் எதையுமே உள்ளாட்சி அமைப்புகள் பின்பற்றுவதில்லை.

ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் குப்பை எரிப்பதை இன்றுவரை கட்டுப்படுத்த முடியவில்லை. இதே போல் இறைச்சி கழிவுகளை எப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்கான போதிய விழிப்புணர்வு இல்லாது செயல்படும் உள்ளாட்சி அமைப்புகளால் பாதிப்பு தான் அதிகம் ஆகியுள்ளது.

சுகாதாரத்தில் உள்ளாட்சி நிர்வாகங்கள் அதிகளவில் அலட்சியம் செய்கின்றன. இறைச்சி கழிவுகளை அப்புறப்படுத்த தேவையான அறிவுரைகளை வழங்கி கட்டுப்படுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறைச்சி கழிவுகள் அதிகம் மண்வளத்தை பாழாக்குகின்றன. இதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சிறப்பு உத்தரவுகளை பிறப்பித்து கட்டுப்படுத்த முன்வர வேண்டும்.

Advertisement