ரயில்வே ஸ்டேஷன் அறிவிப்பில் ஸ்ரீவில்லிபுத்துார்

ஸ்ரீவில்லிபுத்துார்: ரயில்வே ஸ்டேஷன்களில் செய்யப்படும் வழித்தட நகரங்களின் அறிவிப்புகளில் ஸ்ரீவில்லிபுத்துார் பெயரையும் உச்சரித்து அறிவிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டுமென ஸ்ரீவில்லிபுத்துார் மக்களும், ஆண்டாள் பக்தர்களும் எதிர்பார்க்கின்றனர்.

108 வைணவ தலங்களில் ஒன்றாக ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு நகரங்களை சேர்ந்த மக்களும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உட்பட பல வெளிமாநில பக்தர்களும் ரயில்கள் மூலம் வந்து செல்கின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துாருக்கு நேரடி ரயில்கள் இல்லாததால் சென்னை, மதுரை, விருதுநகர் வந்து ரயில் மாறி வருகின்றனர்.

இந்நிலையில் ரயில்வே ஸ்டேஷனில் செய்யப்படும் வழித்தட நகரங்களின் அறிவிப்பில் ஸ்ரீவில்லிபுத்துார் பெயர் உச்சரிக்கபடுவதில்லை. இதனால் வெளி மாவட்ட, மாநில மக்கள் மட்டுமின்றி புதிதாக பயணிக்கும் தமிழக மக்களும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தற்போது ஸ்ரீவில்லிபுத்துார் வழியாக பொதிகை, சிலம்பு, கொல்லம், கொச்சுவேலி, எர்ணாகுளம், வேளாங்கண்ணி, செங்கோட்டை, மயிலாடுதுறை ரயில்கள் இயங்கி வருகிறது.

இந்த ரயில்கள் புறப்படும் நகரங்களிலும், வழித்தட நகரங்களில் உள்ள ரயில்வே ஸ்டேஷனில் செய்யப்படும் அறிவிப்புகளில் ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷன் பெயர்களை உச்சரிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்ரீவில்லிபுத்துார் மக்களும், ஆண்டாள் பக்தர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement