வடகிழக்கு மாநிலங்களை காட்டி சீனாவுடன் வங்கதேசம் பேரம் இந்தியா கண்டனம்

புதுடில்லி : இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், வங்கக் கடலை அணுகுவதற்கான பாதுகாவலராக வங்கதேசம் விளங்குவதாக, அந்நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் கூறியுள்ளதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சீனாவின் கடன் வலையில் சிக்கியுள்ளதால் இப்படி பேசுவதாக கூறியுள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து, ராணுவத்தின் உதவியால் இடைக்கால அரசு அமைந்துள்ளது. அதன் தலைமை ஆலோசகராக, நோபல் பரிசு வென்றுள்ள முகமது யூனுஸ் உள்ளார்.
நிதி நெருக்கடி
மாணவர் போராட்டம் மற்றும் அதைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீது தாக்குதல்கள் அதிகமாயின. இதையடுத்து, வங்கதேசத்துடனான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் வங்கதேசம் சிக்கியுள்ளது. குறிப்பாக, அந்த நாட்டில், சீனா அதிகளவு முதலீடுகள் செய்துள்ளது. சீனாவின் கடன்களை அடைக்க முடியாமல் வங்கதேசம் திணறுகிறது.
இந்நிலையில், சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை, முகமது யூனுஸ் சமீபத்தில் சந்தித்தார்.
அப்போது, 'இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்கள் நிலத்தால் சூழப்பட்டுள்ளன. அவை வங்கக் கடலை அணுகுவதற்கு வழியே இல்லை. எனவே, இந்த பகுதிகள் வங்கக் கடலை அணுகுவதற்கான பாதுகாவலனாக, வங்கதேசம் உள்ளது.
'அதனால், வங்கதேசத்தில் சீனா அதிக முதலீடுகளைச் செய்து உற்பத்தி, சந்தைப்படுத்துதலை அதிகரித்தால் நாட்டின் வளர்ச்சிக்கு சாதகமாக அமையும்' என, யூனுஸ் கூறினார்.
இது குறித்து நம் வெளியுறவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
தன் நாட்டில் அதிக முதலீடுகள் செய்வதற்காகவும், கடனுக்கான வட்டியை குறைக்கவும் சீனாவிடம் வங்கதேசம் கோரியுள்ளது. அதற்காக அவர் இவ்வாறு கூறியதாக தெரிகிறது.
ஏற்கனவே, தெற்காசியாவில் தன் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக, பல நாடுகளுக்கு கடன் உதவிகளை சீனா வழங்கியுள்ளது. அதன் வாயிலாக அந்த நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்கிறது.
பதிலடி
சீனாவின் இந்த கடன் வலையில், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகள் ஏற்கனவே சிக்கியுள்ளன. தற்போது, வங்கதேசமும் சிக்கியுள்ளது. அதையே யூனுசின் பேச்சு வெளிப்படுத்துகிறது.
இந்தியாவை பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் அவர் பேசியுள்ளார். வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் ஒரு பகுதி. இந்த மாநிலங்கள், வங்கதேசத்தின் நிலப்பரப்பால் சூழப்பட்டுள்ளதாக கூறுவது, சீனாவின் ஊதுகுழலாக அவர் செயல்படுவதாகவே தெரிகிறது.
இந்தியாவின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அல்லது மிரட்டல் விடுக்கும் நோக்கத்துடன், சீனாவின் மொழியாக அவருடைய பேச்சு உள்ளது.
வடகிழக்கு மாநிலங்கள் உட்பட இந்தியாவின் எந்த ஒரு நிலப்பரப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட விடமாட்டோம்.
நாட்டின் இறையாண்மையை விட்டுக் கொடுக்க மாட்டோம். தகுந்த நேரத்தில் அவருடைய பேச்சுக்கு பதிலடி கொடுக்கப்படும்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.











மேலும்
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
ஆன்லைன் சூதாட்ட தடை நடவடிக்கை: தீவிரம் வேண்டும் என்கிறார் அன்புமணி
-
7 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்