மராத்தி பேசாதவர்களின் கன்னத்தில் அறையுங்கள்; நவநிர்மாண் சேனா ராஜ் தாக்கரே ஆவேசம்

12

மும்பை: “மஹாராஷ்டிராவில் மராத்தியில் பேசவில்லை என்றால் கன்னத்தில் அறையுங்கள்,” என, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.


மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.


இங்கு மும்பையில் மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அந்த கட்சி தலைவர் ராஜ் தாக்கரே பேசியதாவது:


வெளி மாநிலங்களில் இருந்து வந்து, எங்கள் மும்பையில் தங்கி வசிப்பவர்கள் மராத்தி பேச மறுக்கின்றனர். அப்படி சொல்பவர்கள் கன்னத்தில் அறைய வேண்டும். இந்த விவகாரத்தில் நாட்டின் வளர்ச்சியைப் பற்றி கூற வேண்டாம்.


ஒவ்வொரு மாநிலத்திற்கும், அதன் தாய்மொழி என ஒன்று இருக்கிறது. அது மதிக்கப்பட வேண்டும். மஹாராஷ்டிராவில், மும்பையில் மராத்தி மதிக்கப்பட வேண்டும்.


நம் கட்சி தொண்டர்கள் நாளை முதல், ஒவ்வொரு வங்கிக்கும், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் போய் பாருங்கள். அங்கே மராத்தி பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்யுங்கள். நீங்கள் அனைவரும் மராத்திக்காக உறுதியாக நிற்க வேண்டும்.


தமிழகத்தைப் பாருங்கள்; அவர்கள் மொழி விவகாரத்தில் உறுதியாக உள்ளனர். ஹிந்தி வேண்டாம் என்கின்றனர். கேரளாவில் கூட ஹிந்தியை துணிச்சலாக எதிர்க்கின்றனர்.


வாட்ஸாப்பில் வரலாற்றைப் படிப்பதையும், ஜாதிய கண்ணோட்டத்தில் மக்களைப் பார்ப்பதையும் நிறுத்தும்படி, மஹாராஷ்டிர இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். சிலர் தங்களின் அரசியல் லாபத்திற்காக உங்களை பிரிக்கின்றனர். மராத்தியர்கள் ஒன்றாகச் சேர்வதைத் தடுக்கவே இப்படிச் செய்கின்றனர்.


ஏன் எல்லாருக்கும் திடீரென்று அவுரங்கசீப் ஞாபகம் வருகிறது? படம் பார்த்து விழித்தெழுந்த ஹிந்துவால் எந்த பயனும் இல்லை. அதனால்தான் சொல்கிறேன், வாட்ஸாப்பில் வரலாற்றைப் படிக்க முடியாது; புத்தகங்களில்தான் படிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement