போதை பழக்கத்துக்கு அடிமையானவருக்கு மனநல டாக்டரின் கண்காணிப்பு அவசியம்; அரசு வழிகாட்டுதல்கள் வெளியீடு

5

சென்னை: 'போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு, மனநல டாக்டரின் கண்காணிப்பின் கீழ், தீவிர ஆழ்நிலை சிகிச்சை வழங்கிய பின் மறுவாழ்வு மையங்களில் அனுமதிக்க வேண்டும்' என, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.


மது, போதை பொருட்களுக்கு அடிமையானவர்களை மீட்கும் சிகிச்சை மையங்கள் மற்றும் மறுவாழ்வு மையங்களுக்கான குறைந்தபட்ச தரநிலை வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விபரம்:


அதீத போதை பழக்கத்துக்கு ஆளானவர்களை, அதிலிருந்து மீட்க, பாதிப்பின் அடிப்படையில், அவர்களை வகைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். முதலில், அவர்களுக்கு உடலில் உள்ள நச்சுத்தன்மை மற்றும் போதைப் பழக்கத்தை கைவிடுவதால் ஏற்படும், உடனடி உளவியல் பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டும்.

அந்த காலகட்டத்தில், நோயாளியின் பாதிப்பின் தீவிரத்தை உணர்ந்து, சிகிச்சை வழங்குவது அவசியம். ஒரு வார கால தீவிர சிகிச்சைக்கு பின், நோயாளி மறுவாழ்வு சிகிச்சைக்கு தகுதி பெறுவார். அதன்படி, மறுவாழ்வு மையங்களில், அவருக்கு உளவியல் ரீதியான சிகிச்சைகளும், மீட்பு சிகிச்சைகளும் வழங்கலாம்.


இத்தகைய சிகிச்சைகள் வழங்கும் மையங்களை, இரு வேறு வகையாக பிரிக்கலாம். ஒருங்கிணைந்த போதை மீட்பு மையங்கள் என்றும், மறுவாழ்வு மையங்கள் என்றும் வகைப்படுத்தலாம்.


ஒருங்கிணைந்த மையங்களில், முதல் நிலை தீவிர சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சிகிச்சை இரண்டும் வழங்கப்பட வேண்டும். மறுவாழ்வு மையங்களில், உளவியல் சார்ந்த மீட்பு சிகிச்சைகள் வழங்க வேண்டும்.


ஒருங்கிணைந்த மையங்களில், 24 மணி நேரமும் ஒரு டாக்டர் மற்றும் நர்ஸ் பணியில் இருப்பது அவசியம். ஒரு உளவியல் ஆலோசகரும், அங்கு பணியமர்த்தப்பட வேண்டும்.

மறுவாழ்வு மையங்களில், வாரம் ஒரு முறையாவது நோயாளிகளை பரிசோதித்து, மனநல டாக்டர் சிகிச்சையளிக்க வேண்டும். அதேபோல, ஒரு எம்.பி.பி.எஸ்., டாக்டரும், நர்சும் தினம்தோறும் பணியில் இருப்பது முக்கியம்.


நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதும் அவசியம். 'சிசிடிவி கேமரா'க்கள் மறுவாழ்வு மையங்களில் இருப்பதும் கட்டாயம். உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ, எந்த துன்புறுத்தலுக்கும் நோயாளிகளை உள்ளாக்குவது குற்றம்.


முதல் நிலை தீவிர சிகிச்சை பெறாத எந்த நோயாளிகளையும், மறுவாழ்வு மையங்களில் அனுமதிக்கக் கூடாது. அதேபோன்று, போதை மீட்பு மையங்களுக்கு தாமாக வர விரும்பாத நோயாளிகள், உடல் அளவில் மிகத் தீவிரமான பாதிப்பை அடைய நேரிடும் போது, அவர்களது உறவினர்களின் ஒப்புதலுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கலாம்.


அதுகுறித்த தகவலை, மன நல சிகிச்சை வாரியத்துக்கு அவசியம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement