கல்லுாரி முதல்வரை கலாய்த்த உயர்கல்வி அமைச்சர் கோவி செழியன்

8

திருச்சி: மணப்பாறை அருகே அரசு கல்லுாரி ஆண்டு விழாவில், 'இந்த கல்லுாரியில் இளங்கலை படித்தவர்கள், முதுகலை படிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கல்லுாரி முதல்வர் பேசியதற்கு, உயர் கல்வித்துறை அமைச்சர் கிண்டலாக பதில் சொல்லி கலாய்த்தார்.


திருச்சி மாவட்டம், பன்னாங்கொம்பில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் மூன்றாம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் ஆகியோர் பங்கேற்றனர்.


கல்லுாரி முதல்வர் மலர்மதி பேசுகையில், ''அரசு கல்லுாரியில் இளங்கலை படிக்கும் மாணவர்கள், இதே கல்லுாரியில் முதுகலை படிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று, கோரிக்கை விடுத்தார். அதன்பின், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேசியதாவது:



இந்த கல்லுாரியில் இளங்கலை படித்து முடிப்பவர்களின் பெற்றோர், பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து விடுவோம் என்கின்றனர். அவர்களுக்கு கல்யாணமா; முதுகலை கல்வியா என, இரு அமைச்சர்களும் முடிவெடுங்கள் என்பதை போல, கல்லுாரி முதல்வர் எங்களிடம் பொறுப்பை விட்டுள்ளார்.


தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் வைத்திருக்கும் நெருக்கம், நான் அவர் மீது வைத்திருக்கும் பாசம் இவைகளை கூட்டி, கழித்து பார்த்தால், கல்லுாரி முதல்வரின் கோரிக்கை விரைவில் நிறைவேறி விடும் என்றே தோன்றுகிறது.

இரு அமைச்சர்களையும் மேடையில் அமர வைத்துக்கொண்டு, கல்லுாரி முதல்வர் வைத்த கோரிக்கை, 'மாட்டிக் கொண்டீர்களா மந்திரிகளா' என்பதை போல உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement