பயிர் நகை அடமான கடன் தள்ளுபடி தொகையில் ரூ.1104 கோடி கூட்டுறவு வங்கிக்கு விடுவிப்பு

6


சிவகங்கை: பயிர் கடன், நகை அடமான கடன் தள்ளுபடி தொகையில் ரூ.1104 கோடியை மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு விடுவித்துள்ளது. இதனால் நிதிச்சுமையில் இருந்து வங்கிகள் தப்பித்தன. அதே நேரம் மீதமுள்ள ரூ.2185 கோடியை ஒதுக்க ஜூன் வரை ரிசர்வ் வங்கி கால அவகாசம் அளித்துள்ளது.


தமிழகத்தில் 2021 ஜன., 31 நிலவரப்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர், நகை அடமான கடன் தள்ளுபடி செய்யப்படும் என அப்போதைய முதல்வர் பழனிசாமி 110 விதியின் கீழ் சட்டசபையில் அறிவித்தார். அதன்படி 16 லட்சத்து 43 ஆயிரத்து 347 விவசாயிகளின் பயிர், நகை அடமான கடன் தொகை ரூ.12 ஆயிரத்து 110 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது.


இந்த கடன் தள்ளுபடி தொகையை மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு அவ்வப்போது தமிழக அரசு விடுவித்து வந்தது. நிலுவை தொகையாக ரூ.3289 கோடியை வங்கிகளுக்கு வழங்காமல் அரசு வைத்திருந்தது. இந்த தொகையை 2025 மார்ச் 31 க்குள் விடுவித்தால் மட்டுமே தேசிய வங்கிகளில் கூட்டுறவு வங்கிகள் கடன் பெற தகுதி பெறலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இதையடுத்து தமிழக அரசு ரூ.1104 கோடியை வங்கிகளுக்கு விடுவித்து, மீதத்தொகை ரூ.2185 கோடியை விடுவிக்க கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தது. இதையடுத்து கடன் நிலுவை தொகை ரூ.2185 கோடியை 2025 ஜூன் இறுதிக்குள் மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு விடுவிக்க வேண்டும் என கால அவகாசம் அளித்து ரிசர்வ் வங்கி தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நிதி தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு



மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது: நிதிச்சுமையில் தவித்த மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு நிலுவை தொகை ரூ.1104 கோடியை விடுவித்தது, வங்கிக்கு ஏற்பட இருந்த நிதியிழப்பு பிரச்னையை சமாளிக்க உதவும். இதன் மூலம் மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் நிதி தட்டுப்பாடின்றி செயல்பட ஏதுவாக அமையும் என்றார்.

Advertisement