விக்டோரியா மருத்துவமனையில் ரூ.1 கோடியில் புதிய உறுப்பு மீட்பு மையம்

பெங்களூரு: 'விக்டோரியா மருத்துவமனையில் ஒரு கோடி ரூபாயில், புதிய உறுப்புகள் மீட்பு மையம் அமைக்கப்படும்' என, மருத்துவ கல்வி துறை அமைச்சர் சரண்பிரகாஷ் பாட்டீல் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

அனைத்து தானங்களிலும் சிறந்தது உடல் உறுப்பு தானம். உடல் உறுப்பு தான திட்டத்திற்கு புதிய தோற்றத்தை அளிக்க, மருத்துவ கல்வி துறை முடிவு செய்துள்ளது.

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் ஒரு கோடி ரூபாயில், புதிய உறுப்புகள் மீட்பு மையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்களுக்குள் இம்மையம் திறக்கப்படும்.

இறந்த நன்கொடையாளரிடம் இருந்து உறுப்புகளை பெறும் சிறப்பு பிரிவாக செயல்படும். இங்கு ஐ.சி.யு., அறுவை சிகிச்சை அறை, ஆய்வக வசதிகள், பல்வேறு வசதிகள் கிடைக்கும்.

விபத்து, அவசர சிகிச்சை மையம், இரைப்பை குடல் நோய் நிறுவனம், சிறுநீரக உறுப்பு மாற்று மருத்துவமனை, மின்டோ கண் மருத்துவமனை, தோல் வங்கி ஆகியவை அடங்கிய மருத்துவமனையாகும். தென் மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் மிகப்பெரியதாகும்.

உறுப்புகள் தானம் செய்யக்கூடியவர்களை அடையாளம் காண்பதற்கும், பாதுகாப்பான உறுப்பு தானம் செயல்முறைக்கும் குடும்ப ஆலோசனை, உயர்மட்ட ஐ.சி.பி., பராமரிப்பு, சட்ட நடடிக்கை தேவை. இத்திட்டம் ஏழை நோயாளிகளுக்கு பயனளிக்கும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இம்மருத்துவமனையில் உறுப்பு மீட்பு மையம் துவங்குவதால், உறுப்பு தான திட்டம் அதிகரிக்கும். இது ஏழைகளுக்கு பயனளிக்கும். இம்மையத்தில் சிறப்பு ஊழியர்கள், ஐ.சி.யு., படுக்கைகள் உள்ளன. உறவினர்கள் அனுமதி அளித்தால், நன்கொடையாளர் இறந்த பின், அவரின் உடலை, ஐ.சி.யு.,வில் இருந்து ஒரு பிரத்யேக மையத்துக்கு மாற்றுவர். ஹெலிபேட் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டாக்டர் தீபக்,
மருத்துவமனை கண்காணிப்பாளர்

Advertisement