வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் செய்த மணி கண்டெடுப்பு!

1

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் 2.04 மீட்டர் ஆழத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட மணி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் முடிந்து 3ம் கட்ட ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அகழாய்வுப் பணிகளில் பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்தன. இது, வெம்பக்கோட்டையில் வணிகம் நடந்ததற்கான சான்றாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், 3வது கட்ட அகழாய்வின் போது, 2.04 மீட்டர் ஆழத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட மணி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில்; விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் பல அரியவகை தொல்பொருட்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், தற்போது 2.04 மீட்டர் ஆழத்தில் "தங்கத்தால் செய்யப்பட்ட மணி" ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த மணி, 6 மி.மீ சுற்றளவும், 4.7 மி.மீ கணமும், 22 மி.கிராம் எடையும் கொண்டதாக உள்ளது. இதுவரை வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட 7 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement