கேழ்வரகு குன்றில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர்

பெங்களூரு ஜெயநகர் ஒன்பதாவது பிளாக்கில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது ராகிகுட்டா ஸ்ரீபிரசன்ன ஆஞ்சநேய சுவாமி கோவில்.

கன்னடத்தில் குட்டா என்றால் குன்று என்பதாகும். இப்பகுதியை சேர்ந்தவர்களின் கூற்றுப்படி, முன்னொரு காலத்தில் இவ்வூரின் தலைவரின் மனைவி சுதர்மா, ஆன்மிகத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். அவரின் பக்தியை சோதிக்க, மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு நாடோடிகள் வேடத்தில் தோன்றினர். அவரின் வீட்டுக்கு சென்று பிச்சை கேட்டனர்.

அப்போது தயாராக வைத்திருந்த கேழ்வரகு களியை கொடுத்தார். இதை விரும்பாத சுதர்மாவின் மாமியார், கேழ்வரகு களியை திரும்ப பெறுமாறு கூறினார். இவ்வாறு செய்வது புனிதமற்ற செயல் என்பதால், களியை வாங்க நாடோடிகள் மறுத்தனர்.

இதனால் களி, குன்றாக மாறியது. இறுதியில், சுதர்மாவின் தெய்வ பக்தியை மெச்சி, மூவரும் அவருக்கு தரிசனம் வழங்கினர். குன்றாக மாறிய களி அருகில் தங்கி அருள்பாலிக்க விரும்பினர். அத்துடன் தங்களை கற்களாக உருமாற்றி கொண்டதாக கருதப்படுகிறது.

உள்ளூர் இளைஞர்கள், இப்பகுதி மக்களால், 1969 ல் குன்றின் மீது ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டப்பட்டது. இங்கு சீதா -- ராமர் - லட்சுமணர், விநாயகர், ராஜராஜேஸ்வரி, நவக்கிரஹ சன்னிதிகள் உள்ளன. இக்கோவில் 5 ஏக்கரில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் 12 நாட்கள் 'ஹனுமன் ஜெயந்தி' கொண்டாடப்படுகிறது. நிறைவு நாளன்று 35,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருகின்றனர்.

 ஹனுமன் தாரா என்ற நீரூற்று உள்ளது. அதுபோன்று பெரிய, சிறிய மரங்களுக்கு இடையே நீருற்று அமைந்துள்ளது. இது கோவிலின் அழகை மேலும் கூட்டுகிறது. மாலை நேரத்தில் மின் விளக்குகளால் ஜொலிக்கிறது.

 யாகங்கள், ஹோமங்கள், சிறப்பு பூஜைகள் நடத்துவதற்கென சிறிய குடில் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், செயற்கை நீர்வீழ்ச்சியும் அமைக்கப்பட்டுள்ளது.

 ராகிகுட்டாவில் மட்டுமே ஒரே இடத்தில், மும்மூர்த்திகளுக்கு 32 அடி உயர கல் அமைந்து உள்ளது.

 கலாசார நிகழ்ச்சிகள், சிறப்பு பூஜைகளுக்கென அரங்கம் கட்டப்பட்டு உள்ளன.

 கோவிலுக்கு தேவையான தண்ணீர் விநியோகிக்க, தெப்பகுளமும் அமைந்துள்ளது.

 30 பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன. பசுக்களில் இருந்து கறக்கப்படும் பால், சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றன. மீதமாகும் பால், நர்சரி பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

 காலை, மாலை நேரங்களில் பூஜை செய்யப்பட்ட பின், பிரசாதம் வழங்கப்படுகின்றன. சனிக்கிழமை தோறும் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றன.

என்ன உள்ளது



ராகிகுட்டா நல அறக்கட்டளை சார்பில் எஸ்.எஸ்.எல்.சி., வரையிலான, 1,300 கன்னட, ஆங்கில மீடியம் மாணவர்களுக்கான பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படுகின்றன. இது தவிர, பி.யு.சி., பொறியியல் மாணவர்களுக்காக இலவச டியூஷன் வகுப்பும் நடத்தப்படுகின்றன.

இலவச மருத்துவ ஆலோசனை, இ.சி.ஜி., அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங், கண் பரிசோதனை வசதிகள் கொண்ட மருத்துவ மையம் உள்ளன.

கோவில் சார்பில் கட்டப்பட்டுள்ள கல்யாண மண்டபம், விழா நடத்துவதற்காக ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகின்றன. இதற்காக வாங்கப்படும் கட்டணமும் கூட, கோவில் பராமரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது.

கோவில் திறப்பு: தினமும் காலை 8:00 முதல் 11:30 மணி வரை; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை;

நல அறக்கட்டளை



சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8:00 முதல் மதியம் 12:30 மணி வரை; மாலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி: ராகிகுட்டா ஸ்ரீபிரசன்ன ஆஞ்சநேய சுவாமி கோவில், ஒன்பதாவது பிளாக், ஜெயநகர், பெங்களூரு 69.

மேலும் விபரங்கள்: 080 2658 0500, 2659 4255

இ - மெயில்: ragiguddaanjaneya1969@gmail.com

Website: www.ragigudda.org


எப்படி செல்வது?



பஸ்கள்: சிட்டி மார்க்கெட்டில் இருந்து 17, 181, 24, 24ஈ ஒன்பதாவது பிளாக்

மெஜஸ்டிக்கில் இருந்து 18, 25, 25 ஏ.

Advertisement