குடிபோதையில் நண்பர் கொலை

முல்பாகல்: குடிபோதையில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட மோதல் ஒருவரின் கொலையில் முடிந்தது. கொலையாளியை போலீசார் தேடுகின்றனர்.

கோலார் மாவட்டம், முல்பாகல் தாலுகாவின், ஹைதர் நகரில் வசித்தவர் மதீன், 25. இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன் தினம் இரவு, தன் நண்பர்கள் மொயின், பாபா, ஜிலான் ஆகியோருடன் மதுபானம் அருந்த, முல்பாகல் புறநகரில் உள்ள பாருக்கு வந்தார்.

பாரில் மதுபானம் வாங்கிக் கொண்டு, கட்டுமான கட்டடம் அருகில் காலியிடத்தில் அமர்ந்து அருந்தினர். குடிபோதையில் மதீனுக்கும், மொயினுக்கும் ஏதோ காரணத்தால் தகராறு ஏற்பட்டது.

அப்போது மதீன், மொயினை தகாத வார்த்தைகளால் திட்டி, கல்லால் அடித்தார். இதனால் கோபமடைந்த மொயின், அங்கிருந்த இரும்பு கம்பியால், மதீனை வயிற்றில் சரமாரியாக குத்திவிட்டுத் தப்பியோடினார்.

படுகாயமடைந்த மதீன், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். சம்பவத்தை நேரில் பார்த்து பயந்த மற்ற நண்பர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். கொலை சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. முல்பாகல் ஊரக போலீசார், கொலையாளியை தேடுகின்றனர்.

Advertisement