17 வயது சிறுமியை திருமணம் செய்தவர் மீதான போக்சோ வழக்கு: ஐகோர்ட் ரத்து

பெங்களூரு: ஆதரவற்ற 17 வயதுக்கு உட்பட்ட சிறுமியை திருமணம் செய்ததாக, தன் மீது தொடரப்பட்ட போக்சோ, கிரிமினல் வழக்கை ரத்து செய்ய கோரிய கணவரின் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது.
கோலார் மாவட்டம், மாலுாரை சேர்ந்தவர் முனிராஜு. இவர், 2023ல் ஆதரவற்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கருவுற்ற தன் மனைவியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.
அதிர்ச்சி
அப்போது மருத்துவமனையில் சமர்ப்பித்த ஆதார் அடையாள அட்டையை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள், கர்ப்பமானது பெண் அல்ல, சிறுமி என்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, மாலுார் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, சிறுமியின் கணவர் முனிராஜு மீது, மாலுார் போலீசில் புகார் அளித்தனர். முனிராஜுவை கைது செய்த போலீசார், அவர் மீது போக்சோ, கிரிமினல் வழக்குப் பதிவு செய்தனர்.
விசாரணை நடத்திய போலீசார், கோலார் விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். நீதிமன்றமும் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
பெண் குழந்தை
தன் மீதான வழக்கை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், முனிராஜு வழக்கு தொடர்ந்தார். இதேவேளையில், 17 வயது சிறுமிக்கு, பெண் குழந்தை பிறந்தது.
முனிராஜு தாக்கல் செய்த மனு, நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிறுமி தரப்பில் தாக்கல் செய்த மனுவில், 'என் கணவரை இவ்வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். அவரை விடுப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை' என்று கூறப்பட்டிருந்தது.
முனிராஜு தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'மனுதாரரின் மனைவிக்கு பெற்றோர் இல்லை. மனுதாரர் தான், இக்குடும்பத்திற்கான வருமானத்தை ஈட்டுகிறார். இவ்வழக்கால், மனுதாரரும், அவரது குடும்பத்தினரும் பல சிரமங்களை சந்திக்க நேரிடும்' என்றார்.
நீதிபதி நாகபிரசன்னா அளித்த தீர்ப்பு:
மனுதாரரின் மனைவியே வழக்கை ரத்து செய்வதில் ஆட்சேபனை இல்லை என்று கூறியுள்ளார். எனவே, முனிராஜு மீது தொடரப்பட்ட போக்சோ, கிரிமினல் வழக்கு விசாரணைக்கு உத்தரவிட்ட விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
வழக்கு ரத்து செய்யப்பட்ட பின், மனைவியை கைவிட்டால், விசாரணை நீதிமன்றம் இவ்வழக்கை மீண்டும் விசாரிக்கலாம்.
இவ்வாறு தீர்ப்பில் அவர் குறிப்பிட்டார்.
மேலும்
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் செய்த மணி கண்டெடுப்பு!
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை