'யு டியூப், வெப் சீரிஸ்' பார்த்து தாவணகெரே வங்கியில் கொள்ளை

தாவணகெரே: கடன் கொடுக்காதால், யு டியூப்பில் வீடியோ, 'மணி ஹெய்ஸ்ட்' என்ற வெப் சீரிஸ் பார்த்து, வங்கியில் கொள்ளை அடிப்பது குறித்த தந்திரங்களை, ஆறு மாதங்களுக்கு மேலாக கற்றுக்கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. கொள்ளை அடித்த 17 கிலோ தங்க நகைகள், தமிழகம் உசிலம்பட்டி கிணற்றில் இருந்து கைப்பற்றப்பட்டது.
தாவணகெரே நியாமதி டவுனில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கியில், கடந்த ஆண்டு அக்டோபர் 26ம் தேதி கொள்ளை சம்பவம் நடந்தது. ஜன்னல் வழியாக வங்கியில் புகுந்த மர்ம நபர்கள், கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திவிட்டு, வங்கி லாக்கரை உடைத்து, 13 கோடி ரூபாய் மதிப்பிலான, 17 கிலோ 705 கிராம் நகைகளை கொள்ளை அடித்துத் தப்பினர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது செய்ய, தாவணகெரே எஸ்.பி., உமா பிரசாந்த் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது. கண்காணிப்பு கேமரா காட்சிகள், தடயங்கள் ஏதும் இல்லை என்பதால், போலீசார் செய்வதறியாமல் திகைத்தனர்.
முன்னுக்கு பின் முரண்
கடந்த சில தினங்களுக்கு முன்பு, சந்தேகத்தின் பேரில் நியாமதியின் மஞ்சுநாத், 32, என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையின்போது, முன்னுக்கு பின் முரணாக பதில் கூறி உள்ளார். தங்கள் பாணியில் போலீசார் விசாரித்ததில், வங்கியில் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டார்.
அவர் கொடுத்த தகவலின் பேரில், நியாமதியில் பேக்கரி நடத்தி வரும், தமிழகத்தை சேர்ந்த விஜய்குமார், 30, அஜய்குமார், 28, பரமானந்தா, 30, நியாமதியின் அபிஷேக், 23, சந்துரு, 23, ஆகிய ஐந்து பேர், கடந்த 28ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 222 கிராம் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.
அவர்களிடம் மேற்கொண்டு நடத்திய விசாரணையில், பல தகவல்கள் வெளியாயின.
சகோதரர்களான விஜய்குமார், அஜய்குமார் ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக நியாமதியில் பேக்கரி நடத்தி வந்துள்ளனர். இவர்கள், 2023 ஆகஸ்டில், தொழிலை விரிவுபடுத்துவதற்காக வங்கிக்கு சென்று, 15 லட்சம் ரூபாய் கடன் கேட்டு உள்ளனர். கடன் தருவதாக, அவர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு, வங்கி ஊழியர்கள் கடன் வழங்க மறுத்துள்ளனர்.
வெப் சீரிஸ்
ஆத்திரமடைந்த சகோதரர்கள், வங்கியை கொள்ளை அடிக்க திட்டம் தீட்டி உள்ளனர். இதற்காக, யு டியூப்பில் வீடியோ, 'மணி ஹெய்ஸ்ட்' என்ற வெப் சீரிஸ் பார்த்து, வங்கியில் கொள்ளை அடிப்பது குறித்த நுட்பங்களை, ஆறு மாதங்களுக்கு மேலாக பார்த்து வந்துள்ளனர்.
பல நாட்கள் வங்கிக்கு சென்று வங்கியின் பாதுகாப்பு அம்சங்கள், வங்கிக்கு வருவோர், பண புழக்கம் என பலவற்றை இருவரும் பார்த்துள்ளனர். கொள்ளை அடிப்பதற்காக கேஸ் கட்டர், ஹைட்ராலிக் கட்டர்கள், காஸ் சிலிண்டர் மூலம் சீரியல் எண்களை அழிக்கும் கருவிகளை வாங்கி உள்ளனர்.
கொள்ளை அடித்துவிட்டுச் செல்லும்போது, கண்காணிப்பு கேமரா காட்சிகளை பதிவு செய்யும் கருவியை திருடி விட்டுச் சென்றது, தடயவியல் நிபுணர்கள் கண்டுபிடிக்காத வகையில் மிளகாய் துாளை கொட்டியது என நடந்த சம்பவங்களை விளக்கி உள்ளனர்.
உசிலம்பட்டி
கொள்ளை அடித்த மீதி நகைகள் எங்கே என போலீசார் கேட்டபோது, மீதமுள்ள தங்க நகைகளை மதுரை, உசிலம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் போட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
கொள்ளையர்கள் கூறியது போன்று, நேற்று போலீசார், தமிழகம் உசிலம்பட்டிக்கு சென்றனர். அவர்கள் கூறியபடி, 30 அடி ஆழமுள்ள கிணற்றில், நீச்சல் வீரர்கள் உதவியுடன் நகைகளை தேடினர்.
கிணற்றுக்குள் பல பெட்டிகள் போடப்பட்டு இருந்தன. ஒவ்வொரு பெட்டியிலும் ஏராளமான தங்க நகைகள் காணப்பட்டன. இது போன்று, பல பெட்டிகளில் இருந்து 17 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன.
மீதமுள்ள தங்க நகைகள் குறித்து போலீசார் விசாரித்ததில், வங்கியில் அடகு வைத்ததாகவும், சில நகைகளை விற்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் துப்பு துலக்கிய 10 போலீசாருக்கு முதல்வர் பதக்கம், சிறப்பு பரிசு ஆகியவற்றை அரசு அறிவித்துள்ளது.
மேலும்
-
தேனீக்கள் கொட்டியதில் கேரள சுற்றுலாப் பயணி பலி
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் செய்த மணி கண்டெடுப்பு!
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி