குப்பை, பால், மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்

பெங்களூரு: குப்பை மீது வரி, பால் விலை உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு போன்றவை இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இவற்றை பொது மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி அரசு பஸ்களில் பெண்ளுக்கு இலவச பயணம், 200 யூனிட்டிற்கு கீழ் பயன்படுத்தினால் இலவச மின்சாரம், மகளிருக்கு 2,000 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, அன்னபாக்யா திட்டம் மூலம் 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை என ஐந்து வாக்குறுதித் திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தியது.

இத்திட்டங்களுக்காக ஆண்டிற்கு 56,000 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இதனால், மற்ற திட்டங்களுக்கும், தொகுதிகளுக்கும் பணம் ஒதுக்குவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

இது அரசின் நிதி நிலைமை மோசம் அடைந்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது.

இதை சரிசெய்வதற்காக அரசு, அத்தியாவசிய பொருட்களின் விலைகளை தொடர்ந்து உயர்த்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

நந்தினி பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வு; மின்சாரம் யூனிட்டுக்கு 36 பைசா உயர்வு; குப்பை கொட்டுவதற்கு பெங்களூருவாசிகளிடம் 10 முதல் 400 ரூபாய் கட்டணம் வசூலிப்பது ஆகியவை இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

பல துறைகளுக்கு அரசு நிதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது, பராமரிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக மக்களிடம் இருந்து வசூல் செய்வதற்கு முடிவு எடுத்துள்ளன.

வாக்குறுதித் திட்டங்கள் என்ற பெயரில் மக்களுக்கு, பத்து ரூபாய் கொடுத்துவிட்டு, நுாறு ரூபாயை வரி என்ற பெயரில் அரசு வசூல் செய்வதாக கூறப்படுகிறது. இதை பொதுமக்கள் எப்படி எதிர்கொள்ளப்போகின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.


வருவாய் எவ்வளவு?



* மின் கட்டணம் உயர்வின் மூலம், கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், ஆண்டுக்கு 2,800 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்ட முடியும்.

* குப்பைக்கு வரி வசூலிப்பதன் மூலம் பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை கழகத்திற்கு ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.

* பால் விலை உயர்வின் மூலம் ஒரு நாளைக்கு 28.60 கோடி ரூபாய் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும்.

Advertisement