25 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை

பெங்களூரு: பெங்களூரு உட்பட 25 மாவட்டங்களில், அடுத்த நான்கு நாட்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கெல்லாம் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இந்திய வானிலை மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

ஒடிசா கடற்கரையில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக கர்நாடகாவில் இன்று முதல் வரும் 4ம் தேதி வரை காற்றுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

கர்நாடகாவில் பெங்களூரு, பெங்களூரு ரூரல், விஜயநகர், துமகூரு, ஷிவமொக்கா, ராம்நகர், மைசூரு, மாண்டியா, கோலார், குடகு, ஹாசன், தாவணகெரே, சித்ரதுர்கா, சிக்கமகளூரு, சிக்கபல்லாபூர், சாம்ராஜ்நகர், விஜயபுரா, ஹாவேரி, கதக், தார்வாட், பெலகாவி, பாகல்கோட், உத்தர கன்னடா, தட்சிண கன்னடா, உடுப்பி ஆகிய 25 மாவட்டங்களுக்கு இன்று முதல் 4ம் தேதி வரை 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் இன்று முதல் 3ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்; மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும்.

பீதர், கொப்பால், ராய்ச்சூர், யாத்கிர் ஆகிய மாவட்டங்களில் வறண்ட வானிலை தொடரும். மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. வரும் 4ம் தேதி, மாநிலம் முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement