ஓலா, ஊபர் டிரைவர்கள் அடாவடி போக்குவரத்து கமிஷனர் கண்காணிப்பு

பெங்களூரு: ஓலா, ஊபர் உள்ளிட்ட செயலிகளில் டிரைவர்கள் டிப்ஸ் கொடுத்தால் தான் ஆர்டர் எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்விஷயத்தில் போக்குவரத்துத்துறை கமிஷனர் யோகேஷ் தீவிரமாக கண்காணிக்க உள்ளார்.

போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் பெற்ற நகரமான பெங்களூரில், சமீப காலமாக 'ரேபிடோ, ஓலா, ஊபர்' உள்ளிட்ட செயலிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இந்த செயலிகள் மூலம் பைக், ஆட்டோ, கார் உள்ளிட்டவற்றை பதிவு செய்து விரும்பும் இடத்திற்கு செல்லலாம். இதற்கான கட்டண தொகையை டிஜிட்டல் முறையிலோ பணமாகவோ கொடுக்கலாம்.

இந்த செயலிகள் பயன்பாடு அதிகரித்ததற்கான காரணம், ஆட்டோ டிரைவர்களிடம் பேரம் பேச தேவையில்லை; பஸ்களுக்காக காத்திருக்க விரும்பாதது; பைக் டாக்சியில் பயண நேரம் குறைவு ஆகியவை கூறப்படுகிறது.

செயலிகளின் தேவை அதிகரித்துவிட்டதால், 'டிப்ஸ்' கொடுக்காமல் பதிவு செய்யும் வாடிக்கையாளர்களின் ஆர்டரை டிரைவர்கள் எடுப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உதாரணமாக, சிவாஜி நகரில் இருந்து ராஜாஜி நகருக்கு ஆட்டோவில் செல்ல 120 ரூபாய். இதில் கூடுதலாக, 10 முதல் 40 ரூபாய் வரை டிரைவருக்கு டிப்ஸ் அளிக்கலாம். ஆனால், இது கட்டாயம் கிடையாது.

தற்போது, யார் டிப்ஸ் அளிக்கின்றனரோ, அவர்களுடைய ஆர்டர்களை மட்டும் தான், டிரைவர்கள் ஏற்கின்றனர். டிப்ஸ் அளிக்காமல் ஆர்டர் செய்தவர்கள் நீண்ட நேரமாக ஆட்டோவிற்காக காத்திருக்கும் சூழல் உருவாகி உள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் மோசமான அனுபவங்களை பதிவிட்டு வருகின்றனர். இவை இணையத்தில் வைரலாகியது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை கமிஷனர் யோகேஷ் கூறியதாவது:

மொபைல் செயலிகளில் ஆட்டோ, கார், பைக் டிரைவர்களுக்கு டிப்ஸ் அளிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கும், போக்குவரத்து துறைக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. இருப்பினும், செயலிகளின் சட்டங்களுக்கு உட்பட்டு ஆட்டோக்கள் செயல்பட வேண்டும். இவ்விஷயத்தில் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement