செய்திகள் சில வரிகளில்

பெலகாவி: கித்துார் ராணி சென்னம்மா 'மினி' மிருகக்காட்சி சாலையில், சமீபத்தில் நிருபமா என்ற பெண் சிங்கம் இறந்தது. இதனால், கிருஷ்ணா என்ற ஆண் சிங்கம் சோர்வுடன் காணப்பட்டது. தற்போது, பிரியங்கா என்ற ஒன்பது வயது பெண் சிங்கம் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், கிருஷ்ணா மகிழ்ச்சியுடன் காணப்படுகிறது.

பாகல்கோட்: குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காக பாகல்கோட் நகரில் 393 உயர் வரையறை கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த கேமராக்களை எஸ்.பி., அலுவலகத்தில் இருந்தே 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் சிறப்பு போலீசார் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு: “கல்யாண கர்நாடகா பகுதி விவசாயிகளுக்காக பத்ரா நீர்தேக்கத்தில் இருந்து துங்கபத்ரா கால்வாய்க்கு, 2 டி.எம்.சி., தண்ணீர் திறந்துவிடப்படும்,” என, முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

ஹாசன்: ஷானவினகுப்பே கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயசுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் மகளிர் சங்கம் கட்டடம் கட்ட முதற்கட்ட பணிகள் நடந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரு குழுவினரிடையே மோதல் வெடித்ததால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சாம்ராஜ்பேட்டை: இங்கு நடந்த ரமலான் தொழுகையில் அமைச்சர் ஜமீர் அகமது கான், அவரது மகன் ஜைத் கான் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கையில் கருப்பு துணி அணிந்து தொழுகையில் ஈடுபட்டனர். இதுபோல மாநிலத்தின் பல பகுதிகளிலும் நடந்தது.

துமகூரு: மதுகிரி தாலுகா, லிங்கெனஹள்ளியில் உள்ள ஹிந்து கோவிலில் யுகாதி பண்டிகையையொட்டி, பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. பாட்டின் சத்தத்தை குறைக்கும்படி கூறி, சில முஸ்லிம் இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிக்கபல்லாபூர்: சிக்கபல்லாபூரில் யுகாதி பண்டிகையின்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 293 பேர் மீது 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சூதாட்டத்தில் பயன்படுத்தப்பட்ட 2,39,860 ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


ரூ.19 கோடி அதிகம்


பெங்களூரு: மத்திய அரசின் விமான தயாரிப்பு நிறுவனமான ஹெச்.ஏ.எல்., 2024 - 25 நிதியாண்டில் 30,400 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டை ஒப்பிடும்போது 19 கோடி ரூபாய் அதிகம் என்பது தெரிய வந்துள்ளது.

Advertisement