காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

சிக்கமகளூரு: குருபுரா கிராமத்தில் காட்டு யானை தாக்குதலில், விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

சிக்கமகளூரு மாவட்டம், தரிகெரே தாலுகாவின் குருபுரா கிராமத்தில் வசித்தவர் விவசாயி வெங்கடேஷ், 58. இவரது வீட்டின் சுற்றுப்பகுதியில் ஒற்றை காட்டு யானை நடமாடியது. இதை விவசாயி கவனிக்கவில்லை.

நேற்று அதிகாலை வெங்கடேஷ், வீட்டு முன் இருந்த தொழுவத்தில் பசு மாட்டை கயிறால் கட்டிக்கொண்டிருந்தார்.

அப்போது ஏதோ சத்தம் கேட்டது. இருட்டாக இருந்ததால், தன் மொபைல் போனில் டார்ச் ஆன் செய்து பார்த்தபோது, யானை நிற்பதை பார்த்து, அலறி அடித்து ஓட முயன்றார்.

ஆனால் அதற்குள் யானை, விவசாயியை தும்பிக்கையால் துாக்கி, மரத்தில் ஓங்கி அடித்தது. படுகாயமடைந்து கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவத்தால் கிராமத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

காட்டு யானைகளிடம் இருந்து, தங்களுக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும் என, கேள்வி கேட்கின்றனர்.

சம்பவ இடத்தை வனத்துறை அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். யானை நடமாடுவதால் கவனமாக இருக்கும்படி கிராமத்தினரை எச்சரித்துள்ளனர்.

Advertisement