தாய்லாந்து நிலநடுக்கத்தில் உயிர் தப்பிய பெங்., தம்பதி

பெங்களூரு: தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற வேளையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பெங்களூரு தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பெங்களூரு திரும்பிய அவர்கள், தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஊடகங்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

பெங்களூரை சேர்ந்த அக்ஷய், சமீபத்தில் மனைவி ஜாக்ருதி, இரண்டு வயது மகனுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்தார். நான்கு நாட்கள் அங்குள்ள பல்வேறு சுற்றுலா இடங்களை சுற்றி பார்த்தனர்.

மார்ச் 28ம் தேதி காலையில் பாங்காங் வந்தனர். ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தனர். அன்று மதியம் நில நடுக்கம் ஏற்பட்டது. ஹோட்டலும் பாதிக்கப்பட்டது. பீதியடைந்து மறுநாளே அங்கிருந்து கிளம்பி, பெங்களூரு திரும்பினர்.

இதுகுறித்து, அக்ஷய் கூறியதாவது:

நாங்கள் ஹோட்டலின் 10வது மாடியில் தங்கி இருந்தோம். என் மனைவி ஜாக்ருதி, குழந்தையை குளிப்பாடிக் கொண்டிருந்தார். அப்போது நாங்கள் இருந்த ஹோட்டல் நடுங்கியதை போன்ற உணர்வு ஏற்பட்டது. முதலில் ஹோட்டலில் ஏதோ பிரச்னை என, நினைத்தோம்.

ஆனால் நில நடுக்கம் அதிகமானதால், உயிர் பிழைத்தால் போதும் என, குழந்தையை துாக்கிக் கொண்டு 10வது மாடியில் இருந்து இறங்கி வந்தோம். கீழே கூச்சலும், குழப்பமுமாக இருந்தது. என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. சாலை முழுதும் மக்கள் நிரம்பி இருந்தனர். ஹோட்டலும் கூட நில நடுக்கத்தால் அசைந்தது.

கடவுள் புண்ணியத்தால், உயிர் பிழைத்து ஊர் திரும்பினோம். இன்னும் நான்கைந்து நாட்கள் சுற்றுலா செய்ய வேண்டி இருந்தது. நில நடுக்கத்தால் சுற்றுலாவை ரத்து செய்துவிட்டு உயிர் பிழைத்தால் போதும் என, பெங்களூரு திரும்பிவிட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement