மேக்னசைட், டூனைட் நிறுவனம் அரசுக்கு ரூ.1,609 கோடி பாக்கி

சென்னை:'மேக்னசைட், டூனைட்' போன்ற கனிமங்களை வெட்டி எடுத்தது தொடர்பாக, நிலுவையில் உள்ள 1,609 கோடி ரூபாயைச் செலுத்த, சேலத்தைச் சேர்ந்த நிறுவனத்துக்கு கனிமவளத் துறை, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மேக்னசைட், டூனைட் போன்ற கனிமங்கள் அதிகமாக காணப்படுகின்றன. இப்பகுதிகளில் குவாரிகள் அமைத்து கனிமங்களை எடுக்க, பல்வேறு தனியார் நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.
சேலத்தில் மேக்னசைட் இருப்பதை, 1890ல் ெஹன்றி டர்னர் என்பவர் கண்டுபிடித்தார். அப்போதைய பிரிட்டிஷ் அரசின் ஒப்புதலுடன், மேக்னசைட் கனிமங்களை வெட்டி எடுத்து, பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை துவக்கினார்.
நோட்டீஸ்
காலப்போக்கில் பல்வேறு மாற்றங்களை கண்ட இந்நிறுவனம், நாடு சுதந்திரம் அடைந்த பின், 1973ல் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அப்போது, இந்நிறுவனம், 'பர்ன் ஸ்டாண்டர்டு கம்பெனி' அதாவது பி.எஸ்.சி.எல்., என்ற பெயரில் செயல்பட்டு வந்தது.
இதன்பின், மத்திய அரசின் ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியா எனப்படும் 'செயில்' நிறுவனம், 2011ல் இதன் பெரும்பான்மையான பங்குகளை வாங்கியது. இதையடுத்து, இது செயில் நிறுவனத்தின் ஒரு உறுப்பு நிறுவனமாக, எஸ்.ஆர்.சி.எல்., என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனம், சேலத்தில் புறம்போக்கு நிலங்களில் மேக்னசைட், டூனைட் கனிமங்களை வெட்டி எடுப்பதற்கான இழப்பீட்டு தொகையை, தமிழக அரசுக்கு கடந்த பல ஆண்டுகளாக செலுத்தாமல் உள்ளது.
இதுகுறித்த இந்நிறுவன முறையீட்டில், தமிழக கனிம வளத்துறை இழப்பீட்டை வசூலிக்கலாம் என, கடந்த ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, இந்நிறுவனத்திடம் இருந்து இழப்பீட்டை வசூலிக்க, கனிமவளத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக, கனிமவளத் துறை சேலம் மாவட்ட பிரிவு உதவி இயக்குநர் சார்பில், எஸ்.ஆர்.சி.எல்., நிறுவனத்துக்கு அனுப்பியுள்ள நோட்டீஸ்:
சேலம் மாவட்டத்தில் புறம்போக்கு நிலங்களில் குவாரிகள் அமைத்து, மேக்னசைட், டூனைட் கனிமங்களை வெட்டி எடுத்ததற்காக, 1987 முதல், 2006 வரையிலான காலத்துக்கு, 184.91 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும்.
நடவடிக்கை
இதே போன்று, 2007 முதல் 2024 டிச., 31 வரையிலான காலத்துக்கு, 1,424.67 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும். மொத்தம் 1,609.59 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.
இத்தொகையை, 24 சதவீத வட்டியுடன் சேர்த்து, அரசு கணக்கில் செலுத்த வேண்டும். தவறினால், வருவாய் வசூல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில், அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிமுறைகளை, கனிமவளத் துறை ஆராய்ந்து வருகிறது.
மேலும்
-
25 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்க தீர்ப்பை ஏற்க மாட்டேன்; ஆனால் அதனை செயல்படுத்துவோம்: சொல்கிறார் மம்தா
-
பீஹார், மேற்குவங்கம், தமிழகத்திற்கு அமித் ஷா பயணம்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: கோல்கட்டா அணி பேட்டிங்
-
வளர்ச்சியை நம்புகிறோம்: எல்லை விரிவாக்கத்தை அல்ல: பிரதமர் மோடி
-
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கச்சத்தீவு மீட்பு மட்டுமே: முதல்வர் ஸ்டாலின்
-
வக்பு மசோதாவுக்கு நடிகர் விஜய் எதிர்ப்பு