'19 கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி தர முன்வந்துள்ளது'

1

சென்னை:''தமிழகத்தில் புதிதாக 19 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்ட குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,'' என, அமைச்சர் நேரு தெரிவித்தார்.

சட்டசபையில், கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்:



அ.தி.மு.க., - மனோஜ் பாண்டியன்: ஆலங்குளம் தொகுதி, கடையம், பாப்பாக்குடி, கீழப்பாவூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 163 கிராமங்கள் மற்றும் கீழப்பாவூர் பேரூராட்சிக்கு, கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

அமைச்சர் நேரு: அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, தேவையான குடிநீர் வழங்கப்படுகிறது.

மனோஜ் பாண்டியன்: திட்டம் முழுமையாக நிறைவு பெறாமல் உள்ளது. தனிக்குழு அமைத்து, திட்டத்தை முழுமையாக நிறைவேற்றி, அனைத்து மக்களுக்கும், 40 லிட்டர் தண்ணீர் கிடைக்க செய்ய வேண்டும்.

அமைச்சர் நேரு: புதிதாக திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பராமரிக்க புதிய ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டுள்ளார். கிராமங்களில் நபருக்கு தினமும் 40 லிட்டர், பேரூராட்சிகளில் 90 லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. முழுமையாக ஆய்வு செய்து, சீராக குடிநீர் வழங்கப்படும்.

மனோஜ் பாண்டியன்: கிராமங்களில் நபருக்கு, 55 லிட்டர், பேரூராட்சிகளில் 100 லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். புதிதாக கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு, மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

அமைச்சர் நேரு: நடவடிக்கை எடுக்கப்படும். தாமிரபரணி ஆற்றை நீராதாரமாக வைத்து, தென்காசி மாவட்டத்தின், 464 குடியிருப்புகளுக்கும், மானுார், பாளையங்கோட்டை பகுதிக்கும் சேர்த்து, புதிய குடிநீர் திட்டத்திற்காக, 896 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில், 'டெண்டர்' விடப்பட உள்ளது.

தி.மு.க., - சுந்தர்: உத்திரமேரூர் ஒன்றியம், அன்னாத்துார், சித்தனக்காவூர், தண்டரை, ஆலப்பாக்கம் போன்ற 10 கிராமங்களுக்கு, கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

அமைச்சர் நேரு: தமிழகத்தில் 19 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளன. ஜல் ஜீவன் திட்டத்தில், மத்திய அரசு நிதி ஒதுக்குவதாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு நிதி அமைச்சர், ஏழு திட்டங்களை அறிவித்துள்ளார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மூன்று திட்டங்கள், மேலும் ஒரு புதிய திட்டம் என, மாநில அரசு சார்பில், 11 திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவை பெரிய திட்டங்கள். உத்திரமேரூரில் சிறிய திட்டம் போதும். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அ.தி.மு.க., - தாமோதரன்: கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்தில், குடிநீர் பிரச்னை உள்ளது. கடந்த ஆண்டு, 7 கோடி ரூபாயில் கூட்டுக் குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டது. இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை என, அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த ஆண்டு நிதி ஒதுக்க வேண்டும்.

அமைச்சர் நேரு: கோவை மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள் வேறு சிலரும், சில பகுதிகளில் சரியாக தண்ணீர் வரவில்லை எனக் கூறினர். விரைவில், கோவை மாவட்ட குடிநீர் பிரச்னைக்கு, தனி கூட்டம் கூட்டப்பட உள்ளது. அதில் பிரச்னைகளை கேட்டறிந்து, தீர்வு காணப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement