ஹாக்கி வீராங்கனை வந்தனா ஓய்வு * சர்வதேச அரங்கில் இருந்து...

புதுடில்லி: சர்வதேச ஹாக்கி அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார் வந்தனா.
இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா 32. கடந்த 2009ல் சர்வதேச 'சீனியர்' அரங்கில் கால்பதித்தார். முன்கள வீராங்கனையான இவர், கடந்த 15 ஆண்டுகளாக விளையாடினார். இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனை ஆனார்.
மொத்தம் 320 போட்டிகளில் 158 கோல் அடித்துள்ளார். கடந்த 2021ல் டோக்கியோ ஒலிம்பிக்கில் நான்காவது இடம் பிடித்த இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.
இந்திய ஹாக்கியின் துாணாக திகழ்ந்த வந்தனா, சர்வதேச ஹாக்கி அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
சர்வதேச ஹாக்கியில் இருந்து கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன். கசப்பும், இனிப்பும் நிறைந்தது இம்முடிவு. போட்டிகளில் சிறப்பாக செயல்பட முடியவில்லை, திறமை குறைந்து விட்டது என்பதற்காக, ஹாக்கியை விட்டு விலகவில்லை.
சிறப்பாக செயல்படும் நிலையில், விடைபெற்று விட வேண்டும் என்பதற்காகத் தான் தற்போது ஓய்வு பெற்றுள்ளேன்.
எனது ஹாக்கி 'ஸ்டிக்கில்' இன்னும் 'வேகம்' குறையவில்லை. ரசிகர்களின் ஆரவாரம், ஒவ்வொரு கோல் அடித்த போதும் கிடைத்த 'திரில்லான' அனுபவம், இந்திய தேசத்தின் 'ஜெர்சி' அணிந்து விளையாடிய பெருமையான தருணம் உள்ளிட்ட நினைவுகள் என்றும் மனதில் நிலைத்திருக்கும்.
'டோக்கியோ' நினைவு வந்துவிட்டால், இப்போதும் பறப்பது போன்ற உணர்வு ஏற்படும். ஒலிம்பிக் என்றாலே 'ஸ்பெஷல்' தான். இதில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டி, எனது வாழ்க்கையில் உணர்வுப் பூர்வமானது.
இதில் 'ஹாட்ரிக்' கோல் அடித்தது சிறப்பானது. இதை விட, ஒலிம்பிக் போன்ற சர்வதேச அரங்கில், நாமும் சாதிக்க முடியும் என்பதை இந்திய பெண்கள் அணி நிரூபித்தது கூடுதல் சிறப்பு.
ஹாக்கி இந்தியா லீக் உள்ளிட்ட உள்ளூர் தொடர்களில் தொடர்ந்து விளையாடுவேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

முதல் 'ஹாட்ரிக்'
ஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றில் 'ஹாட்ரிக்' கோல் அடித்த முதல் இந்திய வீராங்கனை வந்தனா. கடந்த 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இச்சாதனை படைத்தார்.

Advertisement