முதுநிலை பேராசிரியர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அவசியம்

சென்னை:'முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ பேராசிரியர்கள், அடிப்படை மருத்துவ கல்வி தொழில்நுட்ப பயிற்சி வகுப்பை நிறைவு செய்திருப்பது அவசியம்' என, தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலர், மருத்துவ கல்வி இயக்குநர்களுக்கு, ஆணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மருத்துவக் கல்லுாரிகளில் எம்.டி., - எம்.எஸ்., போன்ற முதுநிலை படிப்புகளையும், டி.எம்., --- எம்.சி.ஹெச்., போன்ற உயர் சிறப்பு படிப்புகளையும் பயிற்றுவிக்கும் பேராசிரியர்களுக்கு சில தகுதிகள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளன.

அதன்படி, இணை பேராசிரியர்களாகவும், பேராசிரியர்களாகவும் பதவி உயர்வு பெறும்போது, ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில், பி.சி.எம்.இ.டி., என்ற அடிப்படை மருத்துவ கல்வி தொழில்நுட்ப பயிற்சி வகுப்பை நிறைவு செய்திருப்பது அவசியம். அரசு மருத்துவக் கல்லுாரிகளில் பேராசிரியர்களை கடைசி நேரத்தில் நியமிக்கும்போது, விதியை பின்பற்றாமல் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் ஓராண்டிற்குள் பயிற்சி வகுப்பை நிறைவு செய்ய வேண்டும்.

இதற்கான உறுதி சான்றை, மாநில சுகாதார செயலர்கள், மருத்துவ கல்வி இயக்குநர்கள் வழங்க வேண்டும். வரும் 2026 - 27ம் கல்வியாண்டில் மருத்துவக் கல்லுாரிகளுக்கு அங்கீகாரமும், அனுமதியும் வழங்கும்போது, அது கருத்தில் கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement