மாப்பிள்ளைகள் தொகுதிக்கு அரசு ஐ.டி.ஐ., வேண்டும் தி.மு.க., - எம்.எல்.ஏ., கலகலப்பு

சென்னை:''முதல்வர் ஸ்டாலின், போக்குவரத்து, வேளாண்மை துறை அமைச்சர்கள் மாப்பிள்ளையாக இருக்கும் சீர்காழி தொகுதிக்கு, தொழில் பயிற்சி நிலையம் அமைத்து தர வேண்டும்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:

தி.மு.க., - பன்னீர்செல்வம்: சீர்காழி பெரிய அளவில் வளர்ச்சி பெறாத தொகுதி. இங்கு விவசாய தொழில் மட்டும் தான் உள்ளது. நிறைய மாணவர்கள் படிக்கின்றனர். பத்தாம் வகுப்பு படித்து தொழில் துவங்க, அவர்களுக்கு பயிற்சி தேவைப்படுகிறது. எனவே, புத்துாரில் தொழிற்பயிற்சி நிலையம் அமைத்து தர வேண்டும்.

அமைச்சர் கணேசன்:
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏழு தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. எனவே, சீர்காழி தொகுதியில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கும் அவசியம் எழவில்லை.

மேலும், செம்பனார் கோவிலில் புதிய தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. சீர்காழியில் இருந்து அது, 20 கி.மீ., தொலைவில் தான் உள்ளது.

பன்னீர்செல்வம்: முதல்வர் ஸ்டாலின், வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் சீர்காழி தொகுதி மாப்பிள்ளைகள்.

போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், மயிலாடுதுறை தொகுதியின் மாப்பிள்ளை. இவ்வளவு பேர் இருந்தும், தொழிற்பயிற்சி நிலையம் கொண்டு வரவில்லை என்றால், மக்கள் என்னை என்ன நினைப்பர்?

அமைச்சர் கணேசன்: முதல்வர் ஸ்டாலின் 2021ம் ஆண்டு பொறுப்பேற்றபோது, 90 தொழிற்பயிற்சி நிலையங்கள் மட்டுமே இருந்தன. இப்போது, 42 தொழிற்பயிற்சி நிலையங்கள் துவங்கப்பட்டு உள்ளன.

மாப்பிள்ளை தொகுதி என்று குறிப்பிட்டார். இதை முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்று, புதிய தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement