வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்

6

புதுடில்லி: வேலூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 4 வழிச்சாலை அமைக்க ரூ.752.94 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் வேலூரில் 4 வழி புறவழிச்சாலை அமைக்க ரூ.752.94 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. வேலூர் மாவட்டத்தில் 20.492 கி.மீ., தூரத்திற்கு அமையும் இந்தச் சாலை என்எச் -75 மற்றும் என் எச்38 ஆகியவற்றை இணைக்கிறது.


அந்நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், இந்த புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. எதிர்காலத்தில் 6 வழிச்சாலையாக மாற்றுவதற்கு ஏதுவாக நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இத்துடன் இருவழிகளில் பயணிக்கும் வகையில் அணுகு சாலைகளும் அமைக்கப்பட உள்ளது.


கடுமையான வெள்ளம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பேரழிவுகளின் பிரச்னைகளை சரி செய்யும் வகையிலும், நீர்நிலைகள் பாதுகாப்பாக செல்வதற்கு ஏதுவாக போதுமான வடிகால் அமைப்புகள் மற்றும் பாலங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

Advertisement