பைக் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி, மகன் உட்பட 3 பேர் பலி

2

திருப்போரூர்,செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த தையூரைச் சேர்ந்தவர் ஹரிதாஸ், 34; தனியார் நிறுவன ஊழியர்.

இவர், திருப்போரூர் அடுத்த காயாரில் உறவினர் வீட்டின் சுபநிகழ்ச்சியை முடித்து, மனைவி சுகந்தி, 33, மகன்கள் லியோடேனியல், 10, ஜோடேனியல், 5, ஆகியோருடன் 'ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர்' வாகனத்தில், நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு புறப்பட்டார்.

இரவு 11:00 மணிக்கு, காயார் - தையூர் சாலையில் சென்றபோது, தனியார் பள்ளி அருகே வேகமாக வந்த கார், இவர்களின் பைக் மீது மோதியது.

இதில் ஹரிதாஸ், அவரது மனைவி, மகன்கள் அனைவரும் விழுந்து, பலத்த காயமடைந்தனர்.

அங்கிருந்தோர் மற்றும் காயார் போலீசார் அவர்களை மீட்டு, கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவர்கள் பரிசோதனையில் ஹரிதாஸ், அவரது மகன் லியோடேனியல் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. சுகந்தி, சிகிச்சை பலனின்றி இறந்தார். ஜோடேனியல் தீவிர சிகிச்சையில் உள்ளார்.

இறந்த மூவரின் உடலை மீட்ட போலீசார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

காயார் போலீசார் விசாரணையில், கேளம்பாக்கத்தில் செருப்பு கடை வைத்துள்ள அஸ்வின்குமார், 43, அவரது மனைவி மற்றும் மகனுடன் காரில் வந்ததும், இந்த விபத்தில் இவர்கள் மூவருக்கு லேசான அடிபட்டதும் தெரியவந்தது. விபத்து குறித்து, போலீசார் மேற்கொண்டு விசாரிக்கின்றனர். இதேபோல், மேலும் இரு சம்பவங்களில், இருவர் இறந்துள்ளனர்.

பள்ளிக்கரணை

துரைப்பாக்கம், சாய்நகரைச் சேர்ந்தவர் தன்ராஜ், 42; அம்பத்துாரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

நேற்று காலை 5:45 மணிக்கு, துரைப்பாக்கம் - -பல்லவரம் சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே, அவ்வழியே சென்ற 'ஸ்விப்ட்' கார் மோதியதில் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலே தன்ராஜ் இறந்தார். காரை ஓட்டி வந்த ஓட்டுநர் ஜெப்ரியை, 30, போலீசார் கைது செய்தனர்.

சேலையூர்

சேலையூர் அடுத்த மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாலாஜி, 46; சித்தாலப்பாக்கத்தில் ஆடிட்டர் ஒருவரின் உதவியாளர்.

நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து, மாடம்பாக்கம் சாலை வழியாக, 'யமஹா' இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கோவிலாஞ்சேரி சந்திப்பு அருகே தடுமாறி விழந்ததில், பின்னால் வந்த டாரஸ் லாரியின் சக்கரம் ஏறி, பாலாஜி சம்பவ இடத்திலே இறந்தார். இதை பார்த்து பயந்துபோன லாரி ஓட்டுநர், வாகனத்தை அங்கேயே விட்டு தப்பினார்.

Advertisement