எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே... * மும்பை அணியின் புது நாயகன் அஷ்வனி

1

மும்பை: மும்பை அணியின் புதிய 'வேகப்புயலாக' உருவெடுத்துள்ளார் அஷ்வனி குமார். அறிமுக போட்டியில் நான்கு விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
மும்பையில் நேற்று முன் தினம் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் கோல்கட்டா அணி (16.2 ஓவர், 116), மும்பையிடம்(12.5 ஓவர், 121/2) வீழ்ந்தது. இதில் 'வேகத்தில்' மிரட்டிய அஷ்வனி குமார், முதல் பந்திலேயே அனுபவ ரகானேவை அவுட்டாக்கினார். நட்சத்திர வீரர்களான ரிங்கு சிங், மணிஷ் பாண்டே, ரசலை வெளியேற்றினார். பிரிமியர் வரலாற்றில் அறிமுக போட்டியில் 4 விக்கெட் சாய்த்த முதல் இந்திய பவுலர் என்ற சாதனை படைத்தார்.
அஞ்சாத வீரர்
பஞ்சாப், மொகாலியின் ஜன்ஜேரி கிராமத்தில், எளிய குடும்பத்தில் பிறந்தவர் அஷ்வனி 23. கிரிக்கெட் ஆர்வம் கொண்ட இவர், மணிக்கு 140 கி.மீ., வேகத்தில் பந்துவீசுவார். பவுன்சர், யார்க்கர், ஸ்லோ பால் என அனைத்து 'ஆயுதங்களையும்' பயன்படுத்துவார். பும்ரா இல்லாமல் தவித்த மும்பை அணிக்கு, இவரது வரவு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
அஷ்வனி கூறுகையில்,''கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தான் ஊக்கம் அளித்தார். 'பஞ்சாப் வீரன் என்பதற்கு ஏற்ப எதற்கும் அஞ்சாமல் பந்துவீசு. எதிரணி பேட்டர்கள் பயப்பட வேண்டும். அறிமுக போட்டி என்பதால், மகிழ்ச்சியாக விளையாடு. உன் விருப்பம் போல பந்துவீசு,' என 'அட்வைஸ்' செய்தார்.
கிராமம் பெருமை
ரகானே அடித்த பந்தை பிடிக்கும் போது திலக் வர்மா தடுமாறினார். அவர் எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என பிரார்த்தித்தேன். கடைசியில் திலக் கையில் பந்து தஞ்சம் அடைய, முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தினேன். இதனால், தொடர்ந்து சிறப்பாக செயல்பட முடிந்தது. அதிரடி வீரர் ரசலை அவுட்டாக்கியது, கூடுதல் மகிழ்ச்சி அளித்தது. நீண்ட கால கடின உழைப்பு, அர்ப்பணிப்புக்கு பரிசாக ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.
பந்துவீச்சை பார்த்து, எனது கிராமத்தினர் மகிழ்ச்சி அடைந்திருப்பர். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறப்பாக செயல்பட்டு நான் பிறந்த கிராமத்திற்கு பெருமை சேர்ப்பேன்,'' என்றார்.

ரூ. 30 'ஷேர் ஆட்டோ' பயணம்
ரூ. 30 லட்சம் ஒப்பந்தம்...

பல சோதனைகளை கடந்து அஷ்வனி குமார் சாதித்துள்ளார். சென்னை, கோல்கட்டா, ராஜஸ்தான் அணிகளின் பயிற்சி முகாமில் பங்கேற்றிருக்கிறார். ஆனாலும், பிரிமியர் ஏலத்தில் இவரை அடிப்படை தொகையான ரூ. 30 லட்சத்திற்கு மும்பை அணி தான் வாங்கியது.
அஷ்வனி குமார் தந்தை ஹர்கேஷ் குமார் கூறுகையில்,''அஷ்வனிக்கு பயிற்சி தான் முக்கியம். மழை, வெயிலை கண்டுகொள்ள மாட்டான். எங்களது கிராமத்தில் இருந்து 11 கி.மீ., தொலைவில் உள்ள மொகாலி அல்லது புதிய முல்லான்புர் மைதானத்திற்கு தினமும் காலையில் சென்று விடுவான். சில நேரம் சைக்கிளில் செல்வான். 'லிப்ட்' கேட்டு செல்வான். என்னிடம் ரூ. 30 வாங்கிக் கொண்டு 'ஷேர் ஆட்டோ' மூலம் மைதானத்திற்கு செல்வான். பயிற்சி முடித்து இரவு 10 மணிக்கு வருவான். மீண்டும் காலை 5 மணிக்கு பயிற்சிக்கு கிளம்பி விடுவான். கடின உழைப்பு, திறமைக்கு அங்கீகாரமாக, மும்பை அணி ரூ. 30 லட்சத்திற்கு வாங்கியது. என் மகனுக்காக செலவு செய்த தொகைக்கு உரிய பலன் கிடைத்துள்ளது,''என்றார்.

'கேன்வாஸ் ஷூ' பயிற்சி
அஷ்வனி சகோதரர் ஷிவ் ராணா கூறுகையில்,''கிராமத்தில் சாதாரண 'கேன்வாஸ் ஷூ' அணிந்து வேகமாக பந்துவீசுவான். நண்பர்கள் தான் ஸ்பைக்ஸ் ஷூ, தரமான கிரிக்கெட் பந்து வாங்கி கொடுத்தனர். பந்துவீச்சில் சாதிப்பது மட்டுமே அஷ்வனி இலக்காக இருந்தது. பும்ரா, ஸ்டார்க் போல உருவெடுக்க விரும்பினான். மும்பை அணி ரூ. 30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்த போது, எங்கள் கிராமத்தில் உள்ள பயிற்சி அகாடமிகளுக்கு கிரிக்கெட் கிட், பந்துகளை வாங்கி கொடுத்தான். தனது பெயர் பொறிக்கப்பட்ட 'ஜெர்சி' அணிய வேண்டும் என்பதே அவனது கனவாக இருந்தது. தற்போது மும்பைக்காக சாதித்துள்ளான். இனி அஷ்வனி பெயர் பொறிக்கப்பட் ஜெர்சியை அணிய இளம் வீரர்களும் விரும்புவர்,''என்றார்.
தாயார் மீனா குமாரி கூறுகையில்,''அஷ்வனிக்கு பருப்பு கேக், ஆலு புரோட்டா சாப்பிட பிடிக்கும். பந்துவீச்சை பாராட்டி, கிராமத்தினர் பட்டாசு வெடித்து கொண்டாடியது மறக்க முடியாத தருணம்,''என்றார்.

ஒரே ஒரு பழம்

அஷ்வனி கூறுகையில்,''இரவு 7:30 மணிக்கு எனது அறிமுக போட்டி என்பதால், பதட்டமாக இருந்தது. மதிய உணவை தவிர்த்தேன். ஒரு பழம் மட்டும் சாப்பிட்டேன். பசிக்கவே இல்லை. போட்டியில் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளித்தது,''என்றார்.

நழுவிய 5 விக்.,
இந்திய அணியின் முன்னாள் 'ஸ்பின்னர்' ஹர்பஜன் கூறுகையில்,''அஷ்வனி குமார் அதிர்ஷ்டசாலி. அவரது நாளாக அமைந்தது. அருமையாக பந்துவீசி, ஆட்டநாயகனாக (3 ஓவர், 4/24) ஜொலித்தார். இவருக்கு கேப்டன் பாண்ட்யா கூடுதலாக ஒரு ஓவர் கொடுத்திருந்தால், 5 விக்கெட் வீழ்த்தி இருப்பார்,'' என்றார்.

Advertisement