பாப்பிரெட்டிப்பட்டியில் அதிகாரிகளை காணதினமும் 10 மணி ‍நேரம் காத்திருக்கும் மக்கள்





பாப்பிரெட்டிப்பட்டி:--தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில், 4 வருவாய் உள் வட்டத்தில், 45 வருவாய் கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் இருந்து தினமும், பல வகையான சான்றிதழ்கள் பெற, 100க்கும் மேற்பட்டோர் தாலுகா அலுவலகம் வருகின்றனர்.
அவ்வாறு வரும் மக்கள், தாசில்தார், துணை தாசில்தார் உள்ளிட்டவர்களை சந்திக்க, 10 மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை உள்ளது. காலையில் தாசில்தார், துணை தாசில்தார் உள்ளிட்டோர் அலுவலகத்திற்கு வராமலேயே, 'பீல்ட் விசிட்' என சென்று விடுகின்றனர். அதற்கான தகவல்களும் அறிவிப்பு பலகையில் தெரிவிப்பதில்லை.
அவர்களின் பணியை முடித்து, மாலை 6:00 மணிக்கு தான் அலுவலகம் வருகின்றனர். அதற்கு பிறகு சான்றிதழ்கள் சரிபார்த்து, கொடுக்க வேண்டியதை கொடுத்து, வாங்கி செல்லும் நிலை உள்ளது. இதனால் தினமும், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இது குறித்து குருபரஹள்ளியை சேர்ந்த மணிவேல், 45, என்பவர் கூறுகையில், ''பாப்பி ரெட்டிப்பட்டி தாலுகாவில் சான்றிதழ் பெற, கடந்த மூன்று மாதங்களாக அலைந்து வருகிறேன். எப்போது வந்தாலும் தாசில்தார் இல்லை.
பீல்டுக்கு போய் விட்டார்கள். அப்புறம் வாங்க, என கூறுகிறார்கள். காலையில் வருவதே இல்லை. மாலை தான் வருகின்றனர். இல்லை என்பதை கூட மாலை, 6:00 மணிக்கு தான் கூறுகின்றனர். சித்தேரி, எஸ்.அம்மாபாளையம் உள்ளிட்ட மலை கிராமங்களை சேர்ந்த மக்கள், 150 கி.மீ., தொலைவில் இருந்து வந்து இரவு, 8:00 மணி வரை காத்திருந்து, பல்வேறு சான்றிதழ்கள் பெற்று செல்கின்றனர். தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் குறைந்த பட்சம் காலை, 10:00 மணி முதல் 12:00 மணி வரை அலுவலகத்தில் இருந்து, மக்களை சந்திக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement