உ.பி.,யில் 'புல்டோசர்' நடவடிக்கைக்கு கண்டனம் :பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தர உத்தரவு

5

புதுடில்லி :உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில், 'புல்டோசர்' பயன்படுத்தி சிலருடைய வீடுகளை இடித்துள்ளதற்கு, உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு, தலா, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, பிரயாக்ராஜ் மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.

பல வழக்குகள்



உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.

இங்கு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரின் கட்டடங்களை, விதிமுறைகளை மீறி கட்டியதாக கூறி புல்டோசர் வாயிலாக இடிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

பிரயாக்ராஜில் சமீபத்தில், ஒரு வழக்கறிஞர், ஒரு பேராசிரியர் மற்றும் சிலரது வீடுகள் இவ்வாறு புல்டோசர் வாயிலாக இடிக்கப்பட்டன.

இதை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

கடந்த, 2023ல் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரவுடி கும்பல் தலைவர் அதிக் அஹமதுவுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக தவறாக அடையாளம் காணப்பட்டு, தங்களுடைய கட்டடங்கள் இடிக்கப்பட்டதாக, வழக்கு தொடர்ந்தோர் தெரிவித்தனர்.

மேலும், முந்தைய நாள் இரவில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, மறுநாள் காலையில் வீடுகள் இடிக்கப்பட்டதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வாய்ப்பு



இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அபய் ஓகா, உஜ்ஜல் புய்யான் அமர்வு நேற்று உத்தரவிட்டதாவது:

உத்தர பிரதேச அரசு, குறிப்பாக பிரயாக்ராஜ் மாநகராட்சி நிர்வாகம் மிகவும் மெத்தனமாகவும், பொறுப்பில்லாமலும் நடந்துள்ளது. சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்தால், உரிய முறையில் நோட்டீஸ் வழங்கியிருக்க வேண்டும்.

ஆனால், முதல் நாளில் வீட்டு வாசலில் நோட்டீசை ஒட்டிவிட்டு, மறுநாள் இடித்துள்ளனர்.

இந்த நோட்டீசை ஏன், பதிவு செய்யப்பட்ட தபாலில் அனுப்பவில்லை. இனி இதுபோல் வீட்டு சுவரில் நோட்டீஸ் ஒட்டப்படுவதை ஏற்க முடியாது.

அதுபோல் பதிலளிக்கவும், தங்களுடைய தரப்பு தகவலை தெரிவிக்கவும் இவர்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. வீடு பாதுகாப்பு என்பது அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமைகளில் ஒன்று. அந்த உரிமையை பறிப்பதை ஏற்க முடியாது.

இந்த நடவடிக்கைகள் எங்களது மனசாட்சியை உலுக்கியுள்ளது. உத்தர பிரதேசத்தின் அம்பேத்கர் நகரில் வீடுகளை அகற்றும்போது, தன்னுடைய வீட்டில் இருந்து பாடப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு ஒரு சிறுமி ஓடும் காட்சியை பார்க்கும்போது, மிகுந்த வேதனையாக உள்ளது.

மாநில அரசும், மாநகராட்சி நிர்வாகமும் உணர்வில்லாமல் இதுபோன்று புல்டோசர் நடவடிக்கையை எடுத்துள்ளன. பிரயாக்ராஜில் இடிக்கப்பட்ட வீடுகள் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள ஒவ்வொருவருக்கும் தலா, 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டை மாநகராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும்.

அடுத்தமுறை இதுபோன்று நடவடிக்கை எடுப்பதற்கு முன், அவர்களை இது யோசிக்க வைக்கும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.

Advertisement