விஜயநகருக்கு இடம்பெயரும் ஆக்கிரமிப்பு கடைகள் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் தவிப்பு

பள்ளிக்கரணை, கைவேலி பகுதிகளில், வேளச்சேரி- - தாம்பரம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பின், அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபாதை கடைகள் அமைக்கப்பட்டன.

பின், காய்கறி கடைகள், பழக்கடைகள் என, நுாற்றுக்கணக்கான கடைகள் முளைத்தன. கடந்த இரண்டு ஆண்டுகளில், ஒரு கி.மீ., துாரத்திற்கு சாலையை ஆக்கிரமித்து, நுாற்றுக்கணக்கான கடைகள் அமைக்கப்பட்டன.

ஒரு கட்டத்தில், மின் விளக்கு வசதிகளுடன், அந்த சாலைக்கே உரிமை கொண்டாடும் வகையில், ஆக்கிரமிப்பை கடைக்காரர்கள் விரிவாக்கம் செய்தனர்.

நடைபாதை முழுதும் கடைகள் ஆக்கிரமித்துள்ள நிலையில், அங்கு பொருட்களை வாங்க வரும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள், தங்களின் வாகனங்களுக்கு சாலையின் ஒரு பகுதியை நிறுத்தமாக்கினர்.

இதனால், கடும் போக்குவரத்து நெரிசல், அடிக்கடி விபத்துகள் நிகழத் துவங்கின. இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன் விளைவாக, ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

ஆனால், அடுத்த சில நாட்களிலேயே, அவை மீண்டும் முளைத்தன. இந்நிலையில், திடீரென திட்டப் பணிகளின்போது தோண்டப்பட்ட மண், கைவேலி பகுதி சாலையில் கொட்டப்பட்டதால், கடைகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து பிரச்னைக்கும் தற்காலிக தீர்வு கிடைத்தது.

இந்நிலையில், விஜயநகர் பகுதியை குறிவைத்து, ஆக்கிரமிப்பாளர்கள் இடம் பெயர்ந்துள்ளனர். விஜயநகர் மேம்பாலத்தின் அணுகு சாலையில் இருந்து மடிப்பாக்கம் திருப்பம் வரை, மீண்டும் கடைகள் அமைக்கத் துவங்கியுள்ளனர்.

இது, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், புழுதிவாக்கம், உள்ளகரம், நங்கநல்லுார் பகுதிகளில் இருந்து, விஜயநகர் பாலத்தின் அடியில், யு - டர்ன் செய்து, பள்ளிக்கரணை செல்லும் வாகனங்களுக்கு, பெரும் இடையூறை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், காவல் துறையினர் ஆரம்பத்திலேயே இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஆக்கிரமிப்பு கடைகளை அதிரடியாக அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
- -நமது நிருபர் -

Advertisement