பெரம்பலுாரில் மாணவியரை கடித்த விடுதி சமையலர் கைது

பெரம்பலுார்:பெரம்பலுார் அருகே, அலைபேசியில் பேசுவதற்கு இடையூறாக சத்தம் போட்ட மாணவியரை கடித்து காயப்படுத்திய விடுதி பெண் சமையலரை, 'தினமலர்' செய்தி எதிரொலியாக சஸ்பெண்ட் செய்து பெரம்பலுார் கலெக்டர் கிரேஸ்பச்சாவ் நேற்று உத்தரவிட்டார்.

பெரம்பலுார் மாவட்டம், பெரியவடகரை கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம் மகள் கவுசல்யா, 14, பசும்பலுார் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகள் ஸ்ரீமதி, 12, இவர்கள் வெண்பாவூர் அரசு பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர் விடுதியில் தங்கி வெண்பாவூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் முறையே 8, 7ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

விடுதி சமையலரான செல்வி, 40, மார்ச் 31 காலை 11 மணியளவில் விடுதியில் சாப்பாடு செய்வதற்காக ஊற வைத்திருந்த அரிசியை கையில் எடுத்து, கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, மீதி அரிசியை ஊற வைத்திருந்த அரிசியில் மீண்டும் போட்டுள்ளார்.

இதை பார்த்த மாணவியர், அரிசியில் எச்சில் துப்பி விட்டதாக வார்டன் சங்கீதாவிடம் புகார் கூறினர். எச்சில்பட்ட அரிசியை கீழே கொட்டிவிட்டு, வேறு அரிசியை ஊற வைத்து சமைக்கக வார்டன் சங்கீதா கூறிய பின்னரும், செல்வி சமைக்காமல் இருந்தார்.

வார்டன் பலமுறை சமைக்க சொல்லியும் கேட்காததால் வார்டன் உத்தரவுபடி, அதே விடுதியில் துாய்மை பணியாளராக பணியாற்றும் ரெங்கநாயகி, 43, என்பவர் சமைத்து மாணவியருக்கு மதிய உணவு வழங்கினார்.

அன்று மதியம் 2:15 மணியளவில் மாணவியர் விடுதி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த சமையலர் செல்வி, ஏன் கத்திக்கொண்டிருக்கிறீர்கள் என மாணவியரை திட்டி மாணவியர் மீது கல் எரிந்தார்.

கவுசல்யா என்ற மாணவி மீது கல் விழுந்ததில் லேசான காயம் ஏற்பட்டது. இதை தட்டி கேட்ட மாணவி ஸ்ரீமதியை சமையலர் செல்வி கடித்தார். காயமடைந்த இருவரும் பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்த, தினமலர் செய்தி எதிரொலியாக விசாரணை செய்ய மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். விசாரணையில், சமையலர் மீது குற்றம் உள்ளது என தெரியவந்ததை தொடர்ந்து அவரை சஸ்பெண்ட் செய்து பெரம்பலுார் கலெக்டர் கிரேஸ்பச்சாவ் உத்தரவிட்டார்.

மாணவியர் புகாரில், கை.களத்துார் போலீசார் வழக்கு பதிந்து, சமையலர் செல்வியை கைது செய்தனர்.

Advertisement