ஊட்டி, கொடைக்கானலில் 'புனிகுலர்' ரயில் இயக்க ஆய்வு

சென்னை:ஊட்டி, கொடைக்கானலில், 'புனிகுலர்' வகை சுற்றுலா ரயில்கள் இயக்குவது தொடர்பாக, சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ள, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:



தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில், போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


அதன்படி, ஊட்டி, கொடைக்கானல் மற்றும் மாமல்லபுரத்தில், 'புனிகுலர்' வகை ரயில்களை இயக்குவதற்கான கட்டமைப்புகளை உருவாக்க முடியுமா என, ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்கான, 'டெண்டர்' சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

மிகவும் குறுகிய பாதைகள், மலைகளில் உள்ள சாய்வான பாதைகளில், இந்த வகை ரயில்களை இயக்க முடியும்.


பயணிக்கும்போதே, இயற்கை அழகை ரசிக்கும் வகையில், கண்ணாடி பெட்டிகளாகவும், பாதுகாப்பு அம்சங்களுடனும் இந்த ரயில் இருக்கும்.



ஊட்டி, கொடைக்கானல் மலைகளில் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள், எந்த வழித்தடங்கள், எவ்வளவு துாரம் பயணிக்க முடியும் ஆகியவற்றை ஆய்வு செய்து, அறிக்கையாக தயாரித்து, ஆறு மாதங்களில் தமிழக அரசிடம் அளிக்கப்படும்.


இதற்கான ஒப்புதல் கிடைத்த பின், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.


மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளை ஆய்வு செய்து, அதிநவீன, 'ரோப் கார்' வசதி அமைக்க திட்டமிட்டுள்ளோம்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.'புனிகுலர்' ரயில்களில், பல வகைகள் உள்ளன. ஒரே ஒரு பஸ் அளவிலான பெட்டி, ஒரே பஸ்சை இரண்டாக பிளவுபடுத்தினால் உள்ள அளவிலான பெட்டிகள், வட்ட வடிவிலான பெட்டிகள் என, பல வகைகள் உள்ளன.



நம் மாநிலத்திற்கு ஏற்ற வகையிலான பெட்டி எது என்பதை ஆராய்ந்த பிறகே, இதற்குரிய பணிகள் துவங்கும் என தெரிகிறது.

Advertisement