அணைப்பட்டி கோயில் அருகே பூங்கா அமைக்க கோரிக்கை

சென்னை:சட்டசபையில் நடந்த கேள்வி நேர விவாதம்:

அ.தி.மு.க., - தேன்மொழி: திண்டுக்கல் மாவட்டத்தில், நிலக்கோட்டை அடுத்த அணைப்பட்டியில் எழில் சூழ்ந்த மலைகள் மத்தியில், வைகை ஆற்று படுகையில், வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

இதன் அருகேயுள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான நிலத்தில் சுற்றுலா பூங்கா அமைக்க வேண்டும். நிலக்கோட்டை சென்றாய பெருமாள் கோவிலுக்கு செல்வதற்கு, 500 படிகட்டுகள் ஏற வேண்டும். இயற்கை எழில் சூழ்ந்த கொடைக்கானல் மலையை காண்பதற்கு, 'ரோப் கார்' வசதி, பூங்கா ஆகியவை அமைக்க வேண்டும்.

அமைச்சர் ராஜேந்திரன்: அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில், அறநிலையத் துறை பராமரிப்பில் உள்ளது. அந்த துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்று, திட்ட மதிப்பீடு தயாரித்து, மாவட்ட கலெக்டர் தலைமையிலான சுற்றுலா குழு ஒப்புதலுடன் வந்தால், நிதி நிலைமைக்கு ஏற்ப கோரிக்கை பரிசீலிக்கப்படும்.

அ.தி.மு.க., - திண்டுக்கல் சீனிவாசன்: திண்டுக்கல் மாவட்டம், மலைகோட்டையில் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. நிதி நிலைக்கு ஏற்ப என்று சொல்லாமல், அந்த இடத்தை சுற்றுலா தலமாக அறிவித்து வசதிகள் செய்து தர வேண்டும். ஏற்கனவே, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். மாவட்ட அமைச்சர்களுடன் வந்து பார்ப்பதாக கூறினார். நீங்களாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement