சுங்க கட்டண உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

போரூர், சுங்க கட்டண உயர்வை கண்டித்து, மணல் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், மதுரவாயலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழத்தில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில், 78 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில், 40 சுங்கச்சாவடிகளில், 10 சதவீதம் வரையிலான கட்டண உயர்வு நேற்று அமலுக்கு வந்துள்ளது.

இதில், சென்னை மற்றும் புறநகரில் பரனுார், அக்கறை, வானகரம், சூரப்பட்டு, பட்டரைபெரும்புதுார் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், கட்டண உயர்வை கண்டித்து, மதுரவாயல் மேட்டுக்குப்பம் சாலையில், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் சார்பில், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், மணல் லாரி சங்கத் தலைவர் யுவராஜ், ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் அன்பழகன் உட்பட, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து, மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் யுவராஜ் கூறியதாவது:

ஆண்டுதோறும் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதை எதிர்க்கிறோம். தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில், 32 சுங்கச்சாவடிகள் காலாவதியானவை. அவற்றிலும் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

'காலாவதியான சுங்கச்சாவடிகள், 60 கி.மீ., இடைவெளியில் உள்ள சுங்கச்சாவடிகள் மற்றும் ஊராட்சி, நகராட்சி பகுதி சுங்கச்சாவடிகள் நீக்கப்படும்' என, பார்லிமென்டில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி அளித்தார். ஆனால், இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

ஒப்பந்த தொகை வசூலானபின், சுங்கச்சாவடி கட்டணத்தில், 40 சதவீதம் தான் வசூலிக்க வேண்டும் என்று இருந்த சட்டத்தை மத்திய அரசு நீக்கிவிட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, மாநில அரசு தலையிட்டு, முறையான விசாரணை குழுவை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

**

Advertisement