ரூ.26.4 கோடி அழகு சாதன பொருட்கள் துறைமுகத்தில் பறிமுதல்: 2 பேர் கைது

சென்னை, வெளிநாடுகளில் இருந்து வந்த கப்பல் கன்டெய்னர்களில், அதிகளவிலான போலி பொருட்கள் கடத்தி வரப்படுவதாக துறைமுக சுங்க சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு, தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான துபாய் வழியாக சென்னை துறைமுகம் வந்த கப்பலில் இருந்த கன்டெய்னர்களை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

இதில், ஐந்து கன்டெய்னர்களில் அழகு சாதன பொருட்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. திறந்து பார்த்தில் போலி சோலார் விளக்குகள், டிரோன் கேமராக்கள், பிரபல நிறுவன போலி பிராண்டட் காலணிகள் இருந்தன. இவை அனைத்தும் முறையான முத்திரை இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு 7.50 கோடி ரூபாய்.

இதே போல் பிளாஸ்டிக் பொருட்கள் என குறிப்பிடப்பட்டிருந்த இருந்த கன்டெய்னர்களை சோதித்து பார்த்தில், உலகில் பிரபலமான அழகு சாதன பொருட்கள் இருந்தன. இவை அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்டவை. சந்தையில் வாங்கி பயன்படுத்தினால் கேன்சர் வரும் அபாயம் உள்ளது. இதன் மதிப்பு 18.90 கோடி ரூபாய்.

துறைமுக சுங்கத்துறை அதிகாரிகள், மொத்தம் ஏழு கன்டெய்னர்களில் வந்த 26.40 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர். சந்தேகத்தின் பேரில் இறக்குமதியாளர் தொடர்புடைய ஒருவர், ஏஜன்ட் ஒருவர் என, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement