ஐ.பி.எல்., கிரிக்கெட் ரசிகர்களிடம் திருடிய 39 போன் மீட்பு; 8 பேர் கைது

சென்னை, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே, கடந்த 28ம் தேதி ஐ.பி.எல்., போட்டி நடந்தது. இதில், ரசிகர்களின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, 20க்கும் மேற்பட்டவர்களிடம் மொபைல் போன் திருடப்பட்டது.

உடனே, சென்னை போலீசார் சார்பில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த, 'சென்னை சிங்கம் ஐ.பி.எல்., க்யூ.ஆர்.கோடு ஸ்கேன்' செய்து, பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிந்து, ஏ.ஐ., தொழில்நுட்ப கேமராக்கள் 70 உட்பட 110 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதில் திருட்டில் ஈடுபட்டவர்கள் விடுதியில் தங்கியிருப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீசார், நான்கு சிறுவர்கள் உட்பட எட்டு பேரை பிடித்து விசாரித்தனர்.

இதில், கைதானவர்கள் ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார், 22, ஆகாஷ் நோநியா, 23, விஷால் குமார் மாட்டோ, 22, கோபிந்த்குமார், 21, மற்றும் அம்மாநிலங்களைச் சேர்ந்த சிறுவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், 39 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து, திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் யுவராஜ் கூறுகையில், ''சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், 21 பேரிடம் மொபைல் போன் பறிக்கப்பட்டது. இதில், 14 ஐ - போன்களில் 7 ஐ - போன்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் வழக்கு விசாரணை முழுமையடையவில்லை. பறிக்கொடுத்தவர்களின் மொபைல் போனை மீட்கும் பணி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது,'' என்றார்.

சேப்பாக்கம் மைதானத்தில் பாதுகாப்பிற்காக 70 ஏ.ஐ., தொழில்நுட்ப கண்காணிப்பு கேமரா தற்காலிகமாக, 3 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. அவை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய பெரும் உதவியாக இருந்தது. வரும் போட்டிகளின்போது, பாதுகாப்பை அதிகரிப்பதற்காக, 300 ஏ.ஐ., தொழில்நுட்ப கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

- விஜயகுமார்,

கிழக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர்.

Advertisement