ரூ. 27 லட்சம் மோசடி தம்பதி தலைமறைவு

திண்டுக்கல்:அரசு வேலை வாங்கி தருவதாகக்கூறி நான்கு பேரிடம் ரூ. 27 லட்சம் மோசடி செய்த தம்பதியான கார்த்திகேயன் --- பிரேமலதாவை திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசார் தேடுகின்றனர்.

பழநி அருகே சின்னக்கலையம்புத்துார் திரு.வி.க., நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரின் மூத்த மகன் கல்லுாரி படிப்பை முடித்து அரசு வேலைக்காக போட்டித்தேர்வுகள் எழுதி வருகிறார்.

இவர் வீட்டின் அருகே மின் ஊழியர் என அறிமுகமான கார்த்திகேயன், இவரது மனைவி பிரேமலதா குடியிருந்தனர்.

பாலசுப்பிரமணியின் மனைவியிடம் பேசிய பிரேமலதா, தனது கணவருக்கு அவரது நண்பர்களான ஈரோட்டை சேர்ந்த மோகன், சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஜெயக்குமார் மூலமாக மின்வாரியத்தில் வேலை கிடைத்ததாக கூறி உள்ளார்.

அதுபோல உங்கள் மகனுக்கு பொதுப்பணித்துறையில் இளநிலை உதவியாளர் பணி பெற்று தருவதாக ஆசை வார்த்தையை கூறி பல தவணைகளில் வங்கி கணக்கு, நேரடியாகவும் பாலசுப்பிரமணியத்திடம் ரூ. 7 லட்சம் பெற்ற கார்த்திகேயன், பிரேமலதா போலி பணிநியமன ஆணையை கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசார் மேல் விசாரணையில் பாலசுப்பிரமணி உட்பட நான்கு பேரிடம் ரூ. 27 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டதும், கார்த்திகேயன் மின்வாரியத்தில் பணிபுரியவில்லை என்பதும் தெரிந்தது.

கார்த்திகேயன், பிரேமலதாவை போலீசார் தேடுகின்றனர்.

Advertisement