கொல்கட்டா சென்ற கன்டெய்னரை உடைத்து 111 புது 'ஏசி'க்கள் திருட்டு: 6 பேர் சிக்கினர்

எண்ணுார்,எர்ணாவூர், மணலி விரைவு சாலையைச் சேர்ந்தவர் சபரி, 35; டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரது நிறுவனம் வாயிலாக, கடந்த பிப்ரவரி, 9ல், ஆந்திரா மாநிலம், தடாவில் இருந்து, 320 புதிய, 'ஏசி' பெட்டிகளை, நான்கு கன்டெய்னர் லாரிகளில் ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகம் வந்தது.
அதில், ஒரு கன்டெய்னர் பெட்டியில் இருந்த, 320 'ஏசி'க்கள் துறைமுகத்தில் இருந்து கொல்கட்டா மாநிலத்தில் உள்ள நிறுவனத்திற்கு சென்றது.
அங்கு ஊழியர்கள் கன்டெய்னரை திறந்து பார்த்தபோது, 111 ஏ.சி.,க்கள் திருடு போயிருந்தன.
இதுகுறித்து, சபரி எண்ணுார் போலீசில் புகார் அளித்தார். உதவி போலீஸ் கமிஷனர் வீரக்குமார் தலைமையில் தனிப்படை போலீசார், கன்டெய்னர் யார்டில் விசாரணை மேற்கொண்டனர்.
திருவொற்றியூரை சேர்ந்த ராஜேஷ், 41, ஜானகிராமன், 45; திருவாரூரை சேர்ந்த நெடுமாறன், 31; இளமாறன், 32; தண்டையார்பேட்டையை சேர்ந்த சரவணன், 34; தஞ்சாவூரை சேர்ந்த உதயநிதி, 28 ஆகிய ஆறு பேரும் கூட்டாளிகள்.
இவர்கள் சேர்ந்து, லாரி டிரைவர் குருமூர்த்தி உதவியுடன், கன்டெய்னர் பெட்டியை உடைத்து, 111 'ஏசி'க்களை திருடியதும், அதில், 15 'ஏசி' பெட்டிகளை விற்றதும் தெரிந்தது.
ஆறு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 'ஏசி' விற்பனை செய்த, 18.75 லட்சம் ரூபாயையும், 96 'ஏசி'க்களையும் பறிமுதல் செய்தனர். ஆறு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
தலைமறைவாக உள்ள டிரைவர் உள்ளிட்ட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதில், ராஜேஷ் மீது கன்டெய்னர் உடைத்து திருடியது தொடர்பாக 11 வழக்குகளும், நெடுமாறன் மீது பல்வேறு குற்ற வழக்குகளும் உள்ளதாக போலீசார் கூறினர்.
***
