மாமியாருக்கு அஞ்சலி போஸ்டர் 'சில்மிஷ' மருமகனுக்கு 'காப்பு'
கந்திலி,:திருப்பத்துார் மாவட்டம், நிம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி வெங்கடேசன், 45, அவரது மனைவி வினோதினி, 40. தம்பதி தகராறில், இரு மகள்களை அழைத்துக்கொண்டு வினோதினி தாய் வீடான, திருப்பத்துார், இலக்கியநாயக்கன்பட்டிக்கு சென்றார்.
வெங்கடேசன் இரு நாட்களுக்கு முன், வினோதினி பணியாற்றும் கடைக்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டு, தாக்கி மண்டையை உடைத்தார். பின், மாமியார் மாது, உயிருடன் இருக்கும்போதே இறந்து விட்டதாக கூறி, கவிதை இரங்கல் இசையுடன், வீடியோ தயாரித்து, உறவினர்களுக்கு வாட்ஸாப்பில் அனுப்பினார்.
இதைப்பார்த்த உறவினர்கள், வினோதினிக்கு போன் செய்து துக்கம் விசாரித்தும், அஞ்சலி செலுத்த மாலை வாங்கிக்கொண்டு வருவதாகவும் கூறினர்.
அதிர்ச்சி அடைந்த வினோதினி, கணவரால் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் ஆபத்து உள்ளதாக போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிந்த கந்திலி போலீசார், வெங்கடேசனை கைது செய்தனர்.