திடீர் மழை, கடும் வெயிலால் முந்திரி விளைச்சல் பாதிப்பு:" வேளாண்துறையினர் ஆய்வு செய்து ஆலோசனை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், தோட்ட பயிரான, வறட்சியை தாங்கி நீண்டகாலம் பலன் தரும் முந்திரி சாகுபடியும் பரவலாக நடந்து வருகிறது. வானுார், மரக்காணம், கோலியனுார் வட்டாரங்களில் பெருமளவும், விக்கிரவாண்டி, கண்டமங்கலம் வட்டாரங்களில் சிறிய பரப்பிலும், முந்திரி சாகுபடியானது 8,600 ஏக்கர் அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்தாண்டு முந்திரிகள் பூக்க துவங்கியுள்ளன. கடந்த வாரங்களில் திடீரென பெய்த மழையும், கடும் வெயில் தாக்கம் காரணமாக முந்திரி விளைச்சல் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, விழுப்புரம் அருகே கல்லப்பட்டு, மேல்பாதி, செங்காடு மற்றும் வானுார் வட்டார பகுதிகளில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ள இடங்களில், தோட்டக்கலை துறையினர் பார்வையிட்டு, விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்புக்கான ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
இது குறித்து, தோட்டக்கலை துணை இயக்குநர் அன்பழகன் கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில், முந்திரி மானாவாரி பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. இதனால், விளைச்சல் சற்று குறைவாக வருகிறது. முந்திரி உற்பத்திக்கு சாதகமான வெப்பநிலை 24 டிகிரி முதல் 28 டிகிரி செல்சியஸ் ஆகும். இருப்பினும், அதிகபட்சமாக 36 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை குறுகிய காலத்திற்கு மட்டும் தாங்கி வளரும். பூக்கும் பருவத்தில், அதிக மழை இல்லாமல் இருந்தால் காய் பிடிப்பு நன்றாக இருக்கும்.
ஆகவே, பூக்கும் மற்றும் காய்க்கும் நிலையில் வறண்ட காலநிலை இருந்தால் நல்ல அறுவடையை எதிர்பார்க்கலாம். மேகமூட்டம் நிலவினால், தேயிலை கொசுவின் தாக்குதல் காரணமாக பூக்கள் கருகும். அதிக மழை மற்றும் அதிக வெப்பநிலை (39 முதல் 42 செல்சியஸ் வரை) இருந்தாலும் காய் பிடிப்பை பெரிதும் பாதிக்கும்.
தற்போது, திடீர் மழை, வெயில் காரணமாக சற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை நிவர்த்தி செய்ய விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மகசூளை அதிகரிக்க...
கோடையில் முந்திரி மகசூலை அதிகரிக்க, ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை, இருமுறை ஒரு மரத்திற்கு 200 லிட்டர் என்ற அளவில் நீர் பாய்ச்சுவதன் மூலம் காய்பிடிப்பு மற்றும் காய் தக்க வைப்பதை அதிகரித்து அதிக மகசூல் பெறலாம். அங்கக பொருட்கள் மற்றும் பண்ணை கழிவுகளைக் கொண்டு மரத்தை சுற்றிலும் நிலப்போர்வை அமைப்பதன் மூலம் களைகள் கட்டுப்படுத்தப்படுவதுடன், நிலத்தின் மேற்பரப்பில் நீர் ஆவியாவதை தடுக்கலாம். இதனால் மண்ணின் வெப்பநிலை சீராக இருக்கும்.
குறைந்த நீரைக்கொண்டு அதிக பாசனம் செய்திட தோட்டக்கலைத்துறை மூலம், மானியத்தில் நுண்ணீர் பாசனக்கருவிகள் வழங்கப்படுகிறது. முந்திரி விவசாயிகள், பெரும்பாலும் ஊடுபயிர் சாகுபடி செய்யாமல் உள்ளனர். மண்ணின் வகையைப் பொருத்து, மரவள்ளி, மஞ்சள், மிளகு போன்ற பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்வதன் மூலம், கூடுதல் வருமானம் பெறலாம்.
முந்திரி சாகுபடியை ஊக்குவிக்க, தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. முந்திரி சாகுபடி செய்ய விருப்பம் உள்ளவர்களும், பழைய தோப்பை புதுப்பிக்கும் விவசாயிகளும், உழவன் செயலி மூலமும், tnhorticulture.tn.gov.in என்ற தோட்டக்கலைத்துறை இணைய தளத்திலும் விண்ணப்பிக்கலாம். முந்திரி சாகுபடிக்கான ஆலோசனையும் தொடர்ந்து வழங்கப்படுகிறது' என்றார்.