1,189 ஆட்சேபனையற்ற குடியிருப்பு கண்டுபிடிப்பு: பட்டா வழங்க கள ஆய்வு



1,189 ஆட்சேபனையற்ற குடியிருப்பு கண்டுபிடிப்பு: பட்டா வழங்க கள ஆய்வு


நாமக்கல்:'ஆட்சேபனையற்ற குடியிருப்புகளில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் பொதுமக்களுக்கு, வீட்டுமனை பட்டா வழங்குவது' குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா, நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், நகராட்சி, டவுன் பஞ்., பகுதிகளில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் பொது மக்களுக்கு, ஒருமுறை பட்டா வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். இத்திட்டத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் மக்கள் குறித்து கணக்கெடுப்பு பணி, ரேஷன் கார்டு, வீட்டு வரி ரசீது, குடிநீர் கட்டண ரசீது, மின் கட்டண ரசீது ஆகிய ஆவணங்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், 1,189 குடியிருப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அவ்வாறு கண்டறியப்பட்டுள்ள குடியிருப்புகளில், வி.ஏ.ஓ., தாசில்தார், ஆர்.டி.ஓ., ஆகியோர் பயனாளிகளின் ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, டி.ஆர்.ஓ., கலெக்டர் ஆகியோரால் மேல் ஆய்வு செய்யப்படும். இத்திட்டம், நகர்புறத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நாமக்கல் கலெக்டர் உமா, நாமக்கல் தாலுகா, ஆவல்நாயக்கன்பட்டி, மோகனுார் டவுன் பஞ்., உள்ளிட்ட பகுதிகளில், ஆட்சேபனையற்ற குடியிருப்புகளில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் பொதுமக்களுக்கு, வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement